ஊரடங்கு உத்தரவின்போது எந்தெந்த கடைகள், நிறுவனங்கள் இயங்கலாம் - மாவட்ட கலெக்டர் அருண் தகவல்


ஊரடங்கு உத்தரவின்போது எந்தெந்த கடைகள், நிறுவனங்கள் இயங்கலாம் - மாவட்ட கலெக்டர் அருண் தகவல்
x
தினத்தந்தி 29 March 2020 4:40 AM GMT (Updated: 2020-03-29T10:10:10+05:30)

ஊரடங்கு உத்தரவின்போது எந்தெந்த கடைகள், நிறுவனங்கள் இயங்கலாம் என மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி கடந்த 23-ந்தேதி முதல் முழு அடைப்புக்கு உத்தரவிடப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் அந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங் களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் மளிகை, பால், பழம், காய்கறி, உணவு பொருட்கள், விலங்கு தீவனங்கள், மருந்து உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கலாம்.

வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், தபால், தொலை தொடர்பு, இணையசேவை, அத்தியாவசிய தகவல் தொடர்பு, செய்தி, அத்தியாவசிய பொருட்களின் இணைய வணிகம், பெட்ரோல் பங்க்குகள், எரிவாயு, மின்சாரம், குளிர் சேமிப்பு கிடங்குகள், காவலர்கள் (செக்யூரிட்டி), குப்பை அள்ளும் பணியாளர்கள், பால் பொருட்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து, மருத்துவம் மற்றும் அதன் சார்ந்த சேவை நிறுவனங்கள் திறந்திருக்கலாம்.

அதேபோல் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இடைவிடாது இயங்க வேண்டிய நிறுவனங்கள் விவரம் வருமாறு:-

அனைத்து வகையான அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம், திரவ மற்றும் திட சோப்பு வகைகள், தரை சுத்திகரிப்பான், கிருமி நாசினிகள், முக கவசம், உடல் கவசம், காகித நாப்கின்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், குளிர் சேமிப்பு கிடங்குகள் மற்றும் தளவாடங்கள், மிளகாய், மஞ்சள், உப்பு, பருப்பு போன்ற வேளாண் பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகள், மீன், கால்நடை, கோழி தீவன உற்பத்தியாளர்கள், ஆயுர்வேதம், ஓமியோபதி மருந்து உற்பத்தியாளர்கள், மளிகை பொருட்கள் வீட்டு வினியோகம், அத்தியாவசிய பொருட்கள் பேக்கேஜிங் நிறுவனம் உள்ளிட்டவை இயங்கலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story