தங்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முக கவசம் தைத்து இலவசமாக வழங்கி வரும் தையல் தொழிலாளர்கள்


தங்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முக கவசம் தைத்து இலவசமாக வழங்கி வரும் தையல் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 29 March 2020 3:30 AM IST (Updated: 29 March 2020 10:10 AM IST)
t-max-icont-min-icon

தங்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 3 தையல் தொழிலாளர்கள் இணைந்து முக கவசம் தைத்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முக கவசம் அணிந்து நடமாடுவது, அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவது, கிருமிநாசினிகளை பயன்படுத்துவது போன்ற விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மருந்துக்கடைகளில் முக கவசம் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த முக கவசங்களை பொறுத்தவரை அதிகபட்சம் 8 மணி நேரம் தான் உபயோகிக்க வேண்டும்.

இதனால் ஏழை, எளிய மக்கள் முக கவசத்தை பயன்படுத்தாமல் இருக்கின்றனர். முக கவச தட்டுப்பாட்டை போக்க தஞ்சை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், தையல் தொழிலாளர்கள் முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் பல இடங்களில் முக கவசம் ஜோடி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக முக கவசம் இல்லாமல் சர்வசாதாரணமாக வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

நகரப்பகுதிகளில் இந்த நிலைமை என்றால், கிராமப்புறங்களிலோ ஓரிருவரை தவிர மற்றவர்கள் முக கவசம் குறித்து இன்னும் விழிப்புணர்வு இல்லாமலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் கிராம மக்களுக்கு முக கவசத்தை இலவசமாக தைத்து கொடுக்க வேண்டும் என தையல் தொழிலாளர்கள் 3 பேர் ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர். அவர்கள் முக கவசம் தயார் செய்து தங்கள் கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி கீழையூர் அருகே ஆண்டிநத்தம்காடு கிராமத்தை சேர்ந்தவர் வீரசிங்கம்(வயது47). குமார்(40). சகோதரர்களான இவர்கள் இருவரும் தையல் தொழிலாளர்கள். மேலும் விவசாயமும் செய்து வருகின்றனர். அதே ஊரைச் சேர்ந்தவர் சித்திரைவேல்(42). தையல் தொழிலாளியான இவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தொழிற்சாலைகள் எல்லாம் அடைக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு சித்திரைவேல் திரும்பி வந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தங்களால் ஆன சேவையை செய்ய வேண்டும் என முடிவு செய்த இவர்கள் மூவரும் இணைந்து தங்கள் கிராம மக்களுக்காக முக கவசம் தயாரிக்கும் பணியை தொடங்கினர். காட்டன் துணியால் முக கவசங்களை தைத்து கடந்த சில நாட்களாக தங்கள் கிராம மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகின்றனர்.

நாள்தோறும் காலை முதல் மாலை வரையில் முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதால் வீடு, வீடாக சென்று இவர்களால் வழங்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் தைத்து முடித்த முக கவசங்களை தங்கள் கிராமத்தில் உள்ள டீக்கடையில் சென்று கொடுத்து விடுகிறார்கள். அங்கு வந்து பொதுமக்கள் பெற்றுச் செல்கிறார்கள்.

இது குறித்து தையல் தொழிலாளி வீரசிங்கம் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முக கவசம் அவசியம். இந்த முக கவசம் தட்டுப்பாடு நிலவுவதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பலர் கிராமப்பகுதிகளில் முக கவசம் இன்றி வெளியே சுற்றி வருவதை அறிந்தோம். இதை பார்த்த நாங்கள், கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு விடாமல் எங்கள் கிராம மக்களுக்காக முக கவசத்தை தைத்து இலவசமாக வழங்க முடிவு செய்தோம். ஏற்கனவே பாலித்தீன் தடை விதிக்கப்பட்டபோது, துணி பைகள் தைக்க ஈரோட்டில் இருந்து காட்டன் துணிகளை வாங்கி வந்தோம். அந்த துணி அதிக அளவில் இருக்கிறது. இதை பயன்படுத்தி முக கவசம் தயாரித்து எங்கள் கிராம மக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்துள்ளோம். தினமும் 300 முக கவசம் வரையில் எங்களால் தயாரிக்க முடிகிறது என்றார்.

Next Story