கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: கவர்னரும், ஆட்சியாளர்களும் அரசியல் செய்கிறார்கள் - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றசாட்டு
புதுவை மாநிலத்தில் கவர்னரும், ஆட்சியாளர்களும் அரசியல் செய்கிறார்கள் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் கவர்னரும், ஆட்சியாளர்களும் அரசியல் தான் செய்கிறார்கள். அவர்களிடம் ஒற்றுமை இல்லை. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களிடமும் ஒற்றுமையில்லை. இதனால் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் மற்றொரு துறை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்து வருகிறது. இதுகுறித்து துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து முடிவு எடுக்கவில்லை. இதனால் கடைகள் திறந்திருப்பது அறிந்தவுடன் மக்கள் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். இதுநீடித்தால் புதுச்சேரியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால்கூட அன்றைய தினமே புதுச்சேரி முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளது.
எனவே கொரோனா தடுப்பு விஷயத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உயிரை பணயம் வைத்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் அரசுத்துறை ஊழியர்களிடமும் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்பது மனிதாபிமானமற்ற செயல். எனவே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 3 மாத சம்பளத்தை ஊக்க தொகையாக வழங்க வேண்டும்.
மேலும் மத்திய நிதி மந்திரி அறிவித்துள்ள இலவச அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை புதுச்சேரி ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் இரு வாகனம் மட்டும் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தை போல் புதுச்சேரியில் தீயணைப்பு துறையில் உள்ள உயரமான இயந்திரங்கள் மூலம் பெரிய, பெரிய கட்டிடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மேலும் கிருமி நாசினி தெளிப்பதில் ஆளும் கட்சி தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும், எதிர்க்கட்சி தொகுதிகள் பின்னுக்கு தள்ளப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story