பெரிய மார்க்கெட் பகுதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்: உழவர் சந்தையில் நாராயணசாமி திடீர் ஆய்வு - பொதுமக்களுக்கு அறிவுரை


பெரிய மார்க்கெட் பகுதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்: உழவர் சந்தையில் நாராயணசாமி திடீர் ஆய்வு - பொதுமக்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 29 March 2020 5:15 AM GMT (Updated: 2020-03-29T10:35:47+05:30)

புதுவை உழவர் சந்தையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பொதுமக்களிடம் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வரலாம். ஆனால் கும்பலாக வரக் கூடாது. மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக பெரிய மார்க்கெட், உழவர் சந்தை பகுதியில் உள்ள கடைகள் முழுவீச்சில் இயங்கி வருகின்றன. இங்கு நாள்தோறும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெரிய மார்க்கெட், உழவர் சந்தை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்பதாலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாலும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பல இடங்களில் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் பெரும்பாலான மக்கள் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க பெரிய மார்க்கெட்டை நோக்கி படையெடுக்கின்றனர். ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை கட்டுப்படுத்தினர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் எந்த கட்டுப்பாட்டையும் அவர்கள் மதிப்பதில்லை. அதுமட்டுமின்றி கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இதை தடுக்க முயற்சிக்கும் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் பல நேரங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. நெருக்கடியான இடத்தில் இயங்கி வருவதால் பெரிய மார்க்கெட்டில் பொதுமக்கள் தூர இடைவெளியை கடைபிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இதை தவிர்க்க அரசு மாற்று வழியை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தற்போது புதிய பஸ் நிலையம், அண்ணா திடல், ரோடியர் மில் திடல் போன்ற இடங்கள் காலியாகவே உள்ளன. அந்த இடத்தில் தற்காலிகமாக மளிகை, காய்கறி கடைகளை இயக்க செய்யலாம். அவ்வாறு செய்தால் பொதுமக்களும் சமூக இடை வெளியை கடைபிடிக்க வாய்ப்பு ஏற்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்தநிலையில் புதுவை பழைய பஸ்நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை பகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த பொதுமக்களிடம், ‘கடைகளில் பொதுமக்கள் போதிய இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்கவேண்டும். ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக நிற்ககூடாது. தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். கடைக்காரர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். கூடுமானவரை பொதுமக்கள் கடை வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். தங்கள் வீடுகளின் அருகிலேயே திறந்திருக்கும் கடைகளில் தேவையான பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

Next Story