மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பஸ் நிலையங்களில் தினசரி மார்க்கெட் செயல்பட தொடங்கியது


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பஸ் நிலையங்களில் தினசரி மார்க்கெட் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 30 March 2020 3:45 AM IST (Updated: 29 March 2020 11:57 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தினசரி மார்க்கெட் அந்தந்த பகுதியில் உள்ள பஸ் நிலையங்களில் செயல்பட தொடங்கியது.

ஈரோடு, 

கொரோனா பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் தினசரி மார்க்கெட் பகுதியில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க விசாலமான இடங்களை தேர்வு செய்து அங்கிருந்து காய்கறிகள் விற்பனை செய்ய அந்தந்த பகுதி மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தினசரி மார்க்கெட் அந்தந்த பகுதியில் உள்ள பஸ் நிலையங்களில் செயல்பட தொடங்கியது.

பவானியில் அந்தியூர் பிரிவு அருகே தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 300–க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இந்த நிலையில் அந்தியூர் பிரிவு அருகே செயல்பட்டு வந்த தினசரி மார்க்கெட் அங்குள்ள புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து காய்களை வாங்கி சென்றனர். பொதுமக்கள் 1 மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 1 மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன.

பவானி புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்ட தினசரி மார்க்கெட்டை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சில வியாபாரிகள் முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். உடனே அவர்களுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் தான் கொண்டு வந்த முக கவசங்களை வழங்கினார். மேலும் அங்கிருந்த வியாபாரிகளிடம் தரமான காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மார்க்கெட் முடிந்த பின்னர் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று பவானி நகராட்சி பொறியாளர் கதிர்வேலுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி பவானி அம்மா உணவகத்திலும் தரமான உணவுகளை தயாரித்து கொடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று பவானி அம்மா உணவகத்தில் 300–க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட் வடக்குப்பேட்டையில் செயல்பட்டு வந்தது. இந்த தினசரி மார்க்கெட் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு 180–க்கும் மேற்பட்டவர்கள் காய்கறி கடை அமைத்திருந்தனர். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு காய்கறி வாங்க சதுர கட்டம் போடப்பட்டிருந்தது. அந்த கட்டத்துக்குள் பொதுமக்கள் நின்று காய்கறிகளை வாங்கி செல்ல சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் தங்களுடைய கைகளை கழுவிய பின்னர்தான் பஸ் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 5 மணிக்கு செயல்பட தொடங்கிய மார்க்கெட் காலை 9.30 மணி வரை செயல்பட்டது.

கோபி தினசரி மார்க்கெட் அங்குள்ள பஸ் நிலையத்தில் நேற்று செயல்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். பொதுமக்கள் கூட்டமாக நின்று காய்கறிகள் வாங்குவதை தவிர்க்கும் வகையில் 1 மீட்டர் இடைவெளி விட்டு வாங்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதேபோல் பெருந்துறை, சென்னிமலை தினசரி மார்க்கெட் பஸ் நிலையத்தில் செயல்பட்டது. மேலும் சென்னிமலை பகுதியில் நேற்று இறைச்சி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. எனினும் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதுடன், பலரும் இறைச்சி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story