தூத்துக்குடி அருகே, என்ஜினீயர் வீட்டில் 39 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடி அருகே என்ஜினீயர் வீட்டில் 39 பவுன் நகைகளை மர்மநபர் திருடி சென்று உள்ளார்.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக்நகரை சேர்ந்தவர் வின்ஸ்டன் அந்தோனி சேவியர் (வயது 31). இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜேசுசகாய மோனிகா.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் எம்.சவேரியார் புரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று அவர் தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கணவர் வின்ஸ்டனிடம் கொடுத்து ஸ்பிக்நகரில் உள்ள தங்களது வீட்டில் வைக்கும்படி கூறினார். அதன்படி அவர் அங்குள்ள வீட்டிற்கு சென்று ஏற்கனவே வீட்டில் வைத்திருந்த நகைகளுடன் சேர்த்து இந்த நகைகளையும் வைத்தார்.
மறுநாள் வீட்டில் நகைகள் இருக்கிறதா என்று பார்த்தபோது வீட்டில் இருந்த சுமார் 39 பவுன் நகைகளை யாரோ மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் அன்னராஜ், நகைகள் எப்படி திருட்டு போனது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story