ஊரடங்கின் போது மதுக்கடைகளை திறந்து வைக்க வேண்டும் - நடிகர் ரிஷி கபூர் கோரிக்கை


ஊரடங்கின் போது மதுக்கடைகளை திறந்து வைக்க வேண்டும் - நடிகர் ரிஷி கபூர் கோரிக்கை
x
தினத்தந்தி 29 March 2020 10:55 PM GMT (Updated: 2020-03-30T04:25:27+05:30)

ஊரடங்கின் போது மதுக்கடைகளை திறந்து வைக்க வேண்டும் என நடிகா் ரிஷிகபூர் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

மும்பை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி, பால், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இந்தநிலையில் பழம்பெரும் இந்தி நடிகரான ரிஷி கபூர் மதுபான கடைகளை திறந்து வைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

என்னை தவறாக நினைக்க வேண்டாம். உரிமம் வைத்துள்ள அனைத்து மதுபான கடைகளும், மாலை வேளையில் இயங்க, அரசு அனுமதி வழங்கவேண்டும் என நான் நினைக்கிறேன். மனஅழுத்தம், நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில் வீடுகளில் முடங்கியிருக்கும் மனிதர்கள், போலீசார், டாக்டர்கள், பொதுமக்களுக்கும் சிறிது இளைப்பாறுதல் தேவை. மனஅழுத்தத்துடன், விரக்தியும் சேர்ந்துவிட கூடாது. இப்போது, மதுபானங்கள், நாடு முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரிஷி கபூரின் கருத்துக்கு சமூகவலைத்தளங்களில் ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மராட்டிய கலால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நாங்கள் நடிகரின் கோரிக்கை குறித்து கருத்து கூற முடியாது. எனினும் அவரின் பரிந்துரையை ஏற்கும் சாத்தியம் இல்லை’’ என்றார்.

Next Story