பட்டணம்காத்தான் ஊராட்சியில் அம்மா பூங்கா அருகே தற்காலிக மார்க்கெட் செயல்பட தொடங்கியது


பட்டணம்காத்தான் ஊராட்சியில் அம்மா பூங்கா அருகே தற்காலிக மார்க்கெட் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 29 March 2020 10:45 PM GMT (Updated: 2020-03-30T05:12:05+05:30)

பட்டணம்காத்தான் ஊராட்சியில் அம்மா பூங்கா அருகே தற்காலிக காய்கறி மார்க்கெட்

பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகரில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இடநெருக்கடி மிகுந்த இந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த மார்க்கெட்டுகளை டி-பிளாக் அம்மா பூங்கா அருகே உள்ள இடத்திற்கு தற்காலிகமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவின் பேரில் மண்டபம் யூனியன் ஆணையாளர் சேவுக பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் அந்த பகுதியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காய்கறிகளை சமூக இடைவெளி விட்டு வாங்கிச்செல்லும் வகையில் கோடுகள் வரையப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இந்த மார்க்கெட்டிற்கு பட்டணம்காத்தான் மற்றும் சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்கிச்சென்றனர். அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் ராமநாதபுரம் தாசில்தார் முருகவேல் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார், சுகாதார துறையினர் அங்கு முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஒலி பெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர தற்காலிக மார்க்கெட்டில் கடை நடத்த விரும்பும் வியாபாரிகள் பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பரந்து விரிந்த இடத்தில் மார்க்கெட் ஏற்படுத்தி தந்த மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகளுக்கும், யூனியன், ஊராட்சி நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story