சமூக இடைவெளியை பின்பற்றாத 6 இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ - வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதல்
வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை பின்பற்றாத 6 இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வேலூர்,
வாரவிடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று அசைவபிரியர்கள் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிடுவார்கள். தற்போது சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் ஏற்படுவதாக வதந்தி பரவியதையடுத்து பொதுமக்கள் சிக்கன் வாங்க தயக்கம் காட்டினர். இந்த நிலையில் அசைவ பிரியவர்களின் பார்வை மீன் மார்க்கெட் பக்கம் திரும்பி உள்ளதால் வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் நேற்று கூட்டம் அலைமோதியது.
அவர்கள் நீண்டவரிசையில் இடைவெளி விட்டு நின்று மீன்வகைகளை வாங்கிச் சென்றனர். வதந்திகள் நிலவினாலும் சிக்கன், மட்டன் கடைகளிலும் மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.
இதனிடையே வேலூர் மாநகர் பகுதிகளில் இறைச்சி கடைகளில் மக்கள் இடைவெளி விட்டு நிற்காமல் கூட்டமாக நின்று இறைச்சிகள் வாங்கிச் செல்வதாக வேலூர் தாசில்தார் சரவணமுத்துவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவரது தலைமையிலான குழுவினர் பல்வறு இடங்களில் சோதனை செய்தனர்.
அப்போது தொரப்பாடியில் உள்ள ஒரு மீன் கடையின் உரிமையாளர் சமூக விலகலை பின்பற்றவில்லை. அந்த கடையில் பொதுமக்கள் கூட்டமாக நின்று மீன் வகைகளை வாங்கிச் சென்றனர். இதைப்பார்த்த அதிகாரிகள் மீன் கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும், சின்னஅல்லாபுரம், ஓட்டேரி, சாய்நாதபுரம், கன்சால்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்த 5 சிக்கன் கடைகளின் முன்பும் மக்கள் இடைவெளி விட்டு நிற்காமல் கூட்டமாக நின்றனர். எனவே அந்த கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வாடிக்கையாளர்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கடையின் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story