கோவை மாநகர பகுதியில், சாப்பாடு இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு போலீசார் உதவி - 30 இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு


கோவை மாநகர பகுதியில், சாப்பாடு இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு போலீசார் உதவி - 30 இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 29 March 2020 10:15 PM GMT (Updated: 30 March 2020 2:56 AM GMT)

கோவை மாநகர பகுதியில் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு, போலீசார் உதவி செய்வதுடன் அவர்களுக்கு 30 இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்து உள்ளனர்.

கோவை,

தொழில் நகரமான கோவையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் அதில் ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். சொந்த ஊருக்கு திரும்ப முடியாதவர்கள் கோவையில் தங்கி உள்ளனர். அவர்கள் உணவு இன்றி தவித்து வந்தனர். எனவே தங்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கோவை மாநகர காவல்துறை, பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறது. நேற்று முதற் கட்டமாக கோவை மாநகர பகுதியை சேர்ந்த 850 பேருக்கு துணை கமிஷனர் செல்வக்குமார் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. அதை பொதுமக்களுக்கு பாலீ சார் வழங்கினார்கள். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

வேலை நிமித்தமாக கோவைக்கு வந்த வடமாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் உணவு இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு குனியமுத்தூர், சுந்தராபுரம், போத்தனூர் உள்பட 30 இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முதல் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேகமாக 5 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வாகனங்களில் உணவுகளை ஏற்றிச்சென்று வினியோகம் செய்து வருகிறோம். எனவே உணவு தேவைப்படும் தொழிலாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

முதற்கட்டமாக மதியம் மற்றும் இரவு என 2 வேளைக்கு உணவு வழங்கி வருகிறோம். காலையில் உணவு கொடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. உணவு வினியோகம் செய்ய தயாராக இருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் காட்டூர் போலீசார் சார்பில் வெளியே செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பது குறித்து உடல் வெப்பநிலையை கணக்கிடும் கருவி மூலம் பரிசோதனை செய்து வருகிறார்கள்.

Next Story