‘தேனி காவலன்’ செயலி மூலம் கொரோனா விழிப்புணர்வு


‘தேனி காவலன்’ செயலி மூலம் கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 29 March 2020 10:00 PM GMT (Updated: 30 March 2020 4:30 AM GMT)

‘தேனி காவலன்’ செயலி மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் செயலியின் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது.

தேனி, 

தேனி மாவட்ட போலீஸ் துறையால் ‘தேனி காவலன்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் பூட்டி விட்டு செல்லும் தங்களின் வீடுகளை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையிலும், பொது இடங்களில் நடக்கும் சட்டவிரோத செயல்கள், விதிமீறல்கள் தொடர்பாக உடனுக்குடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் வகையிலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அதை தடுக்க அரசு துறைகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக போலீஸ் துறை சார்பில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘தேனி காவலன்’ செயலியின் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்த செயலியில் தற்போது கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அத்துடன் அரசு வெளியிடும் முக்கிய அறிவிப்புகள், நோய் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தகவல்கள், உண்மைக்கு மாறான தகவல்கள் இருப்பின் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தல் போன்றவை தொடர்பாக தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் போலீஸ் துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளின் முக்கிய அலுவலர்களின் செல்போன் எண்களும் இதில் இடம் பெற்றுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் இந்த செயலியின் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவர்களை தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story