கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கேரளாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த பால் லாரிகளுக்கு திடீர் எதிர்ப்பு
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து 60 ஆயிரம் லிட்டர் பால் ஏற்றி வந்த 3 லாரிகளுக்கு கிருஷ்ணகிரி ஆவின் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி,
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு 60 ஆயிரம் லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு 3 லாரிகள் வந்தன.
கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தால் தொழிலாளர்கள் திடீரென லாரிகளை உள்ளே செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொழிலாளர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இதையடுத்து அந்த லாரிகள் உள்ளே அனுமதித்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் குமரன் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவின்பேரில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாலைக் கொண்டு பால் பவுடராகவும் நெய், வெண்ணெய் என மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றப்படுகிறது. இதனால் கூட்டுறவு ஒன்றியத்திற்கு லாபம் கிடைக்கும். மேலும் அனைத்து பரிசோதனைகளுக்கு பிறகு வாகனங்களும், வாகன ஓட்டிகளும் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story