ஊரடங்கிற்கு மத்தியிலும் இறைச்சி கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள்


ஊரடங்கிற்கு மத்தியிலும் இறைச்சி கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள்
x
தினத்தந்தி 30 March 2020 3:30 AM IST (Updated: 30 March 2020 10:00 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கிற்கு மத்தியிலும், இறைச்சி கடைகளில் நேற்று அசைவ பிரியர்களின் கூட்டம் அலை மோதியதை பார்க்க முடிந்தது.

கடலூர்,

கொரோனாவை விரட்ட சமூக விலகல் மட்டுமே ஒரே மருந்தாக தற்போது உள்ளது. எனவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூரில் பால், மளிகை, காய்கறி, மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதில் காய்கறி, மளிகை கடைகள் திறந்து இருப்பதற்கான நேரகட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பல கட்டுப்பாடுகள் காற்றில் பறந்த நிலையில் இருந்தது, வேதனை அளிப்பதாக அமைந்தது. பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் வீடுகளில் அசைவ பிரியர்கள், ஆட்டு இறைச்சி அல்லது கோழிக்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் இறைச்சி கடைகளில், அசைவ பிரியர்கள் காலை முதலே குவிய தொடங்கினர்.

அந்த வகையில் கடலூர் அண்ணா மார்க்கெட்டில் கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. கோழிக்கறி கிலோ ரூ.130க்கும், ஆட்டு இறைச்சி கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் யாரும் சமூக விலகலை கடைபிடிக்க வில்லை.

புதுப்பாளையம் மீன் மார்க்கெட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மஞ்சக்குப்பம் உப்பலவாடி தெருவிலுள்ள இறைச்சிக் கடையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை விற்பனை சூடு பிடித்தது. இதேபோல் மாவட்டத்தில் பிற பகுதிகளான மந்தாரக்குப்பம், விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் என்று அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதில் சமூக விலகலை யாரும் கடைபிடிக்காமல், எப்படியாவது இறைச்சி வாங்கி வீட்டுக்கு சென்று சமைத்து சாப்பிட வேண்டும் என்கிற நோக்கில் சில இடங்களில் அசைவ பிரியர்கள் செயல்பட்டது வேதனை அளிக்கும் வகையில் அமைந்தது. கொரோனாவை விரட்ட அரசு எடுக்கும் முயற்சிக்கு, மக்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சாத்தியமாகும். அதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை விரட்டி அடிக்க முடியும். ஆனால் சமூக விலகலை கடைபிடிக்காமல் இதுபோன்று பொதுஇடங்களில் திரண்டால் எவ்வாறு சாத்தியமாகும் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story