மளிகை பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை தடுக்க கூடாது - திண்டிவனத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் கோரிக்கை


மளிகை பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை தடுக்க கூடாது - திண்டிவனத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-30T10:00:23+05:30)

மளிகை பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் தடுக்க கூடாது என திண்டிவனத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

திண்டிவனம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாகனங்களில் கொண்டு வரவும், அதனை விற்பனை செய்யுவும் அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் மளிகை பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளை சில இடங்களில் போலீசார் தடுப்பதாக தெரிகிறது.

இதனால் வியாபாரிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தாசில்தார் ராஜசேகர் தலைமை தாங்கினார். சப்-கலெக்டரின் நேர் முக உதவியாளர் பிரபு வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

இதில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ராம் டெக்ஸ் வெங்கடேசன், காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ஏழுமலை, நகை வியாபாரிகள் சங்க தலைவர் ராம்லால் ரமேஷ், மளிகை பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் கல்கண்டு சுந்தரம் உள்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வியாபாரிகள் பேசியதாவது:- அரசு பிறப்பித்துள்ள ஊரங்கு மற்றும் 144 தடை உத்தரவால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை ஏற்றி வரும் லாரிகளை சில இடங்களில் போலீசார் தடுத்து வருகின்றனர்.

இதனால் எங்களது தொழில் பாதிக்கப்படுகிறது. மேலும் போலீசாரின் கெடுபிடியால் தொழிலாளர்கள் கடைக்கு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்கள் கடையை மூடுவோம் என்றனர்.

அதற்கு தாசில்தார் ராஜசேகர் கூறுகையில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் தடுக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளில் வேலை பார்ப்பவர்களின் விவரங்களை கொடுத்தால், அவர்கள் உங்களது கடைக்கு வந்து செல்ல பாஸ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு விதித்துள்ள விதிமுறைப்படி பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதில் தவறு ஏதும் நடக்கக்கூடாது என்றார். அதற்கு வியாபாரிகள், கொரோனாவை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுவோம் என்று உறுதியளித்தனர்.

Next Story