கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க காய்கறிகளின் விலைப்பட்டியல் அமைக்கப்படும் - கலெக்டர் தகவல்


கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க காய்கறிகளின் விலைப்பட்டியல் அமைக்கப்படும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 March 2020 9:45 PM GMT (Updated: 30 March 2020 4:30 AM GMT)

கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க காய்கறிகளின் விலைப்பட்டியல் அமைக்கப்படும் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

கரூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு, 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோதும் கூட, சில கட்டுப்பாடுகளுடன் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் விற்பனை கரூரில் தடையின்றி நடந்து வருகிறது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தற்காலிக காய்கறி கடைகள் நேற்று முன்தினம் செயல்பட தொடங்கியது. வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பதற்கு அங்கு தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் திருவள்ளுவர் மைதானம் மற்றும் குளித்தலை காவேரி நகர் உழவர்சந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளை கலெக்டர் அன்பழகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வரவேண்டிய மருந்து பொருட்கள், மளிகைப்பொருட்கள், காய்கறிகள் போன்றவை எந்தவித தொய்வும் இல்லாமல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது.

கரூர் மற்றும் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசியப்பொருட்களை போனில் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் கடைகளின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்வதை தடுக்க, காய்கறிகளின் விலைப்பட்டியல்கள் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், குளித்தலை சப்- கலெக்டர் ஷேக் அப்துல்ரகுமான், நகராட்சி ஆணையர்கள் சுதா(கரூர்), மோகன்குமார் (குளித்தலை) உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Next Story