நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் மேலும் ஒருவர் சாவு - கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்


நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் மேலும் ஒருவர் சாவு - கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்
x
தினத்தந்தி 29 March 2020 10:30 PM GMT (Updated: 30 March 2020 4:31 AM GMT)

நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலியானார்.

நாகர்கோவில்,

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருபவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க வசதியாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு தனி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் நீண்டகாலம் நோயால் அவதிப்பட்டு சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பிரிவு ஆகியவையும் உள்ளது.

நேற்று முன்தினம் மாலை வரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர நுரையீரல் நோய்கள் சிகிச்சை பிரிவில் 11 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நள்ளிரவில் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீரிழிவு மற்றும் ‘மைலோபைப்ரோசிஸ்‘ என்று சொல்லக்கூடிய உள்ளுறுப்பு பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கடந்த 2 வாரங்களாக இருமல் இருந்து வந்ததால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்ததாக தெரிகிறது.

அவருக்கு இருமல் இருந்ததால் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இருமல் அதிகமாக இருந்ததால் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று அவரது ரத்தம், சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. அவை வந்த பிறகுதான் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததா? என்பது தெரியவரும் என்று டாக்டர்கள் கூறினர்.

இவரோடு சேர்த்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர நுரையீரல் நோய்கள் சிகிச்சை பிரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இறந்தவரை தவிர மற்ற 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story