பெரிய மார்க்கெட் இன்று முதல் மூடப்படுகிறது: புதிய பஸ் நிலையத்தில் காய்கறி விற்பனைக்கு ஏற்பாடு - நாராயணசாமி அறிவிப்பு


பெரிய மார்க்கெட் இன்று முதல் மூடப்படுகிறது: புதிய பஸ் நிலையத்தில் காய்கறி விற்பனைக்கு ஏற்பாடு - நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 March 2020 10:45 AM IST (Updated: 30 March 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

புதுவை பெரிய மார்க்கெட் இன்று (திங்கட் கிழமை) முதல் மூடப்படுகிறது. அதற்கு பதிலாக புதிய பஸ் நிலையத்தில் காய்கறி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 20 முதல் 25 பேருக்கு கொரோனா அறிகுறி தெரிந்தது. ஆனால் நேற்று ஒரு நாளில் மட்டும் 187 பேருக்கு அறிகுறி தெரிந்துள்ளது.

வளர்ந்த நாடான அமெரிக்காவில் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே இதன் தாக்கத்தை புதுவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் மக்கள் வீதிக்கு வருகின்றனர். இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட சிலரும் வெளியே செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இறைச்சி கடைகளில் மக்கள் அதிகமாக கூடுகின்றனர். அவர்களுக்கு உயிரை பற்றி கவலை இல்லை.

தனித்திருங்கள் என்று கூறினால் அதை கேட்பதில்லை. மக்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம். இதை புதுவை மக்கள் உணரவேண்டும். ஒருவரது உயிர் போனால் அவரது குடும்பத்துக்குதான் இழப்பு. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க பால், மளிகை, காய்கறி கடைகளை திறந்து வைத்து உள்ளோம். எனவே தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இந்த நிலை நீடித்தால் நேர கட்டுப்பாடு விதிப்பது குறித்து பரிசீலனை செய்வோம்.

எனவே மக்கள் ஏப்ரல் 14-ந் தேதி வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது. பெரிய மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் வரிசையில் நின்றும் பொருட்கள் வாங்குவதில்லை. எனவே அதிகாரிகளுடன் கலந்து பேசி சில முடிவுகளை எடுத்துள்ளோம்.

இதன்படி பெரிய மார்க்கெட் இன்று (திங்கட்கிழமை) முதல் மூடப்படுகின்றது. அதாவது காய்கறி கடைகளை மூடி, அவர்களுக்கு வேறு இடங்களில் இடத்தை பகிர்ந்து கொடுக்க உள்ளோம். அதன்படி நேரு வீதி, பாரதி வீதி, மிஷன் வீதி சந்திப்பு வரை சில்லரை விற்பனை கடைகளை வைத்துக் கொள்ளலாம். மொத்த வியாபாரிகள் தங்களது சரக்குகளை புதிய பஸ் நிலையத்தில் இறக்கி, சில்லரை வியாபாரிகளுக்கு தரவேண்டும். அங்கும் சில்லரை கடை வைத்து பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யலாம்.

இதேபோல் அஜீஸ் நகர் மார்க்கெட், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி, செஞ்சி சாலை திடல், காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி ஆகிய இடங்களில் காய்கறி மார்க்கெட் புதிதாக செயல்படும். ஒதியஞ்சாலை, லாஸ்பேட்டை பகுதிகளில் உழவர் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்.

காய்கறி வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் பகிர்ந்து அளிக்கப்படும். இவ்வாறு கடைகளை பிரித்து செயல்படுத்துவதால் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும். பொதுமக்களும் ஒரே இடத்தில் கூடுவது தடுக்கப்படும். இவை அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் ஆணையர்கள் காய்கறி விற்பனைக்கான இடங்களை பிரித்து வழங்குவார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story