கொரோனா தடுப்புக்கு ஆதரவு: சட்டசபை கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பங்கேற்காது - எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி அறிவிப்பு


கொரோனா தடுப்புக்கு ஆதரவு: சட்டசபை கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பங்கேற்காது - எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 March 2020 10:20 AM IST (Updated: 30 March 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபை கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. அதனை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இந்த நிலையில் புதுவை அரசு இன்று (திங்கட்கிழமை) சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த இடைக்கால பட்ஜெட்டை 20 நாட்களுக்கு முன்பு சமர்ப்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

இந்த இடைக்கால பட்ஜெட்டில் அத்தியாவசிய தேவை செலவினங்களும், அரசின் போதிய நிதி ஆதாரமும் உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில் நிதி நிலை அறிக்கையை ஏகமனதாக நிறைவேற்றிக்கொள்ள எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கூட்டம் கூடும் சூழ்நிலை உருவாகும். அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இந்த அரசு மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். மேலும் இந்த அசாதாரண சூழ்நிலையில் புதுச்சேரியின் மற்ற பிராந்தியங்களில் இருந்து வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பது சிரமமாக இருக்கும் என கருதுகிறோம்.

இந்த கூட்டத்தை 144 தடை உத்தரவுக்கு முன்பு கூட்டியிருக்க வேண்டும். மேலும் அரசானது இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபிறகு, கொரோனா வைரசை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும் என அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் வலியுறுத்துகிறது. கொரோனா தடுப்பு தொடர்பாக புதுவை அரசுக்கு, என்.ஆர்.காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

புதுவை அரசு சமர்ப்பிக்கும் இடைக்கால பட்ஜெட்டை ஏகமனதாக நிறைவேற்றிக்கொள்ள ஒப்புதல் அளிப்பதுடன், என்ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story