காரைக்காலில் இருந்து விற்பனைக்கு எடுத்து செல்ல முயன்ற ரூ.55 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் - குடோனுக்கு “சீல்” வைப்பு
காரைக்காலில் இருந்து விற்பனைக்கு எடுத்து செல்ல முயன்ற ரூ.55 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அந்த குடோனுக்கு “சீல்” வைக்கப்பட்டது.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக காரைக் கால் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், சாராய கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி ஒரு சில இடங்களில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், காரைக்காலில் உள்ள ஒரு மதுபான குடோன் ஒன்றில் வாகனத்தில் மதுபாட்டில்கள் ஏற்றிக்கொண்டு இருப்பதாகவும் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீர வல்லபன் மற்றும் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட குடோனுக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த 3 ஊழியர்கள், மதுபாட்டில்களை குடோன் வாசலில் அடுக்கி வைத்திருந்தனர். இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
அப்போது அவர்கள் வெளி இடத்தில் கொண்டு விற்பதற்காக வாகனங்களில் ஏற்றுவதற்காக மதுபாட்டில்கள் தயார் நிலையில் வைத்து இருந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.55 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, துணை கலெக்டர் ஆதர்சிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து துணை கலெக்டர் ஆதர்ஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மது கடைகளை திறக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசின் உத்தரவையும் மீறி மதுபாட்டில்களை வெளியே சென்று விற்பதற்காக குடோன் வாசலில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அந்த மதுபான குடோனுக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு குடோன் மற்றும் மதுபானக்கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story