நகருக்குள் புதைக்க அனுமதி இல்லை; கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் - மும்பை மாநகராட்சி அறிவிப்பு
கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் மட்டுமே செய்ய வேண்டும் என மும்பை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
மும்பை,
இதுகுறித்து மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்தேசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் உடல்களை அருகில் உள்ள மயானத்தில் தகனம் மட்டுமே செய்ய வேண்டும். உடலை அடக்கம் செய்ய அனுமதி கிடையாது. மதசடங்குகள் செய்யும் போது உயிரிழந்தவர்களின் உடலை தொடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் 5 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கொரோனா உயிரிழப்பு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின்னர் தான் உடலை குடும் பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மயான பணியாளர்கள் முறையான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி தான் உடலை தகனம் செய்ய வேண்டும். எனினும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஒருவர் அடக்கம் செய்ய விரும்பினால், மும்பைக்கு வெளியே உடலை கொண்டு சென்று அடக்கம் செய்யலாம். உடலை அனைத்து பாதுகாப்பு விதிகளை பின்பற்றி சொந்த ஏற்பாட்டில் அவர்கள் எடுத்து செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story