ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் பெண்கள் உள்பட 3 பேர் அனுமதி
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் பெண்கள் உள்பட 3 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரம்,
கொரோனா வைரசால் பாதிப்பிற்குள்ளாகும் நபர்களை தனிமைப்படுத்தி சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் ராமநாதபுரத்தில் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ உபகரண வசதிகளுடன் தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டில் மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் யாரேனும் இருந்தால் அவர்களை சுகாதாரத்துறையினர் அழைத்து வந்து அனுமதித்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவ்வாறு மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்து தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு ஏதும் உள்ளதா? என்று ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.
ஏற்கனவே 3 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 6 பேர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் யாரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story