சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விண்ணப்பித்தவர்களில் யாருக்கு அனுமதி? - போலீஸ் கமிஷனர் விளக்கம்


சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விண்ணப்பித்தவர்களில் யாருக்கு அனுமதி? - போலீஸ் கமிஷனர் விளக்கம்
x
தினத்தந்தி 31 March 2020 4:15 AM IST (Updated: 31 March 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்கள் யார்-யாருக்கு? அனுமதி கிடைக்கும் என்பது பற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக நேற்று அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

சென்னை, 

144 தடை உத்தரவு செயல்பாட்டில் உள்ளது. இந்த நேரத்தில் சென்னை நகருக்குள்ளே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்காகவும், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக் கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதற்கு 3 முக்கியமான காரணங்களுக்காக அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

நெருங்கிய உறவினர்கள் இறப்புக்கும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நெருங்கிய உறவினர் திருமணத்துக்கும் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு மட்டும் இந்த அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இதர தேவைகளுக்கு அனுமதி கேட்டால் அனுமதி கிடைக்காது.

மேலும் இந்த 3 முக்கிய காரணங்களுக்காக செல்பவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நேரில் வந்தும் விண்ணப்ப மனுக்களை கொடுக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் நேரில் கமிஷனர் அலுவலகம் வந்து காத்து கிடக்க தேவை இல்லை. அவர்களது கோரிக்கை நியாயமானது என்று தெரிந்தால், அவர்கள் நேரில் அழைக்கப்படுவார்கள்.

நேரில் அழைக்கப்படும்போது, விண்ணப்பித்தவர்கள் முதலில் தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும். அடுத்து தாங்கள் வெளி ஊர் செல்வதற்கான காரணம் சம்பந்தப்பட்ட ஆவணங் களை சமர்ப்பிக்க வேண்டும்.

திருமணத்துக்கு செல்பவர் கள் திருமண பத்திரிகையை காட்டலாம். மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள், உரிய மருத்துவரின் பரிந்துரை சீட்டை காட்ட வேண்டும்.

இதுவரை 9 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் டி.ஜி.பி. அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அந்த மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்கலாம்.

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்கள், அந்த மாநில போலீசாரிடம் அனுமதி சீட்டு பெற்று வந்தால் அனுமதிக்கப்படுவார்கள். கமிஷனர் அலுவலகத்தில், விண்ணப்பம் கொடுக்க வருபவர்கள், உரிய இடைவெளி விட்டு வரிசையில் நின்றுதான் வருகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இதுபோன்ற விண்ணப்ப மனு கொடுத்த 150 பேருக்கு நேற்று வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றும் ஏராளமானவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்று விண்ணப்ப மனு கொடுத்தனர்.

Next Story