கொரோனா வைரஸ் பாதிப்பால் வீட்டிலேயே எளிமையாக நடந்த திருமணங்கள்


கொரோனா வைரஸ் பாதிப்பால் வீட்டிலேயே எளிமையாக நடந்த திருமணங்கள்
x
தினத்தந்தி 30 March 2020 10:30 PM GMT (Updated: 30 March 2020 9:37 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பால் திருமண மண்டபங்களுக்கு பதிலாக வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றன.

தாம்பரம், 

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் சமுக விலகலை கடைபிடிக்க வேண்டும். இதற்காக ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களை தவிர புதிதாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நேற்று சுபமுகூர்த்தநாள் என்பதால் ஏற்கனவே திருமண தேதி நிச்சயிக்கப்பட்டவர்களுக்கு எளிமையான முறையில் வீடுகளிலேயே குறைந்த அளவிலான உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் விவேகாவின் உறவினரான கல்லூரி பேராசிரியை சிவரஞ்சனிக்கும், சாப்ட்வேர் என்ஜினீயர் சாம்சுந்தருக்கும் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளை வீட்டில் 5 பேர், பெண் வீட்டில் 5 பேர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். அவர்களும் பன்னீர், கற்கண்டுக்கு பதிலாக கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்தும், முகக்கவசம் கொடுத்தும் வரவேற்கப்பட்டனர்.

மணமக்கள், புரோகிதர் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். செல்போனில் நாதஸ்வரம் ஒலிக்க வீட்டில் எளிமையான முறையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.

எண்ணூர் அண்ணா நகர் பா.ஜ.க. பிரமுகர் மாடசாமி இல்ல திருமண விழாவும், அவரது வீட்டின் அருகே எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் மிக எளிமையாக நடைபெற்றது. இதில் மணமக்கள், இருவீட்டு உறவினர்கள் உள்பட 30 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

அதேபோல் காஞ்சீபுரம் நாராயண பாளையச் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜன் மகள் சண்முக பிரியாவுக்கும், புதுப்பேட்டை பண்ருட்டியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பிரசன்னாவுக்கும் காஞ்சீபுரத்தில் உள்ள மணமகள் வீட்டில் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் கைகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்து கொண்டு, முகக்கவசம் அணிந்தபடி மணமேடையில் அமர்ந்தனர். 15 பேர் மட்டும் பங்கேற்ற உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்தது.

இதேபோல் சின்ன காஞ்சீபுரத்தில் 2-ம், பிள்ளையார் பாளையத்தில் ஒரு திருமணமும் மிக எளிமையான முறையில் வீட்டிலேயே நடைபெற்றது.

Next Story