இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் சுருட்டிய ஈரோடு என்ஜினீயர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ராமநாதபுரம் போலீஸ்காரரும் ரூ.50 லட்சத்தை இழந்தது தெரியவந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை காவல் கோட்டத்தில் பணியாற்றி வருபவர் போலீஸ்காரர் சுரேஷ், பரமக்குடி சேதுபதிநகர் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜன். இவர்கள் இருவரும் இணையதளத்தில் அன்னிய செலாவணி பணபரிமாற்றத்தில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க விரும்பி உள்ளனர். இதுபற்றி இணையதளம் மூலம் அறிந்த லண்டனை சேர்்ந்த அன்னிய செலாவணி பணபரிமாற்ற நிறுவனத்தினர் ஆன்டர்சன் மற்றும் அபிஸ் ஆகியோர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்காக தங்களின் ஏஜெண்டுகளான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் பிரவீன்குமார் (வயது 34), விசுவநாதன் (36) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். அதன்படி அவர்களை தொடர்பு கொண்ட போது, இணைய தளத்தில் வர்த்தகம் செய்வதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுக்க 200 டாலர் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதை நம்பி தலா ரூ.15 ஆயிரத்தை போலீஸ்காரர் சுரேஷ் மற்றும் அருள்ராஜன் ஆகியோர் செலுத்தி உள்ளனர். இதன்பின்னர் வழிமுறைகளை சொல்லி கொடுத்த பிரவீன்குமார் மற்றும் விசுவநாதன் ஆகியோர் தாங்கள் போலியாக உருவாக்கி வைத்துள்ள நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறி இருவரையும் வழிநடத்தி உள்ளனர்.
இவர்களின் பேச்சை நம்பிய 2 பேரும் தங்களின் பணத்தினை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். முதலில் சில லட்சங்கள் முதலீடு செய்த நிலையில் அதற்கான பங்கு லாபம் என குறிப்பிட்ட தொகையை அவர்களின் கணக்கில் ஈரோடு என்ஜினீயர்கள் செலுத்தி உள்ளனர்.
மேலும் அதிக லாபம் கிடைக்க வேண்டுமானால் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் கடன் வாங்கி பல லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடு மற்றும் பங்கு லாபம் ஆகியவற்றை சேர்த்து போலீஸ்காரர் சுரேஷ் கணக்கில் ரூ.49 லட்சத்து 72 ஆயிரத்து 300, அருள்ராஜன் கணக்கில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இருந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இவர்களின் கணினியை அடுத்தவர் கணினியில் இருந்து இயக்கும் தன்மை கொண்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தி, அவர்களின் பணம் முழுவதையும், பிரவீன்குமார், விசுவநாதன் ஆகியோர் ஒரேநாளில் அபகரித்து கொண்டார்களாம். மறுநாள் கணக்கில் பார்த்த போது பணம் காலியானதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் மற்றும் அருள்ராஜன் ஆகியோர் இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது தங்களுக்கு தெரியாது என்று கூறியதோடு, அவர்களை மிரட்டினார்களாம்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் செய்யப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயபிட்டா தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சைபர் கிரைம் திபாகர், குகனேஸ்வரன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஈரோட்டை சேர்ந்த பிரவீன்குமார், விசுவநாதன் ஆகிய இருவரும் போலியாக நிறுவனத்தை தொடங்கியதாக காட்டியதோடு, பல வங்கிகளில், அங்குள்ள அதிகாரிகள் துணையுடன் போலியாக கணக்கு தொடங்கி, அதில் பணத்தை செலுத்த வைத்துள்ளனர்.
இதுதவிர பல டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்துள்ளதோடு, கணக்குகளை கையாள பல லேப்டாப்கள், ஐபேட்கள், செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பலரை இதுபோன்று முதலீடு செய்ய வைத்து அதில் குறிப்பிட்ட லாப தொகை வழங்கி பணத்தாசை காட்டி அதிக முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வந்துள்ளனர்.
இதில் கிடைத்த பணத்தை மேற்கண்ட இருவரும் கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள தொழில் நிறுவனங்களிலும், ஈரோடு நகைக்கடைகளிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து பங்குதாரர்களாக மாறி உள்ளனர். வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தனிப்படையினர் அங்கு சென்று விசுவநாதன், பிரவீன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 70 ஆயிரம், 25 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், லேப்டாப்கள், 7 செல்போன், 2 கணினிகள், ஹார்ட்டிஸ்க் எனப்படும் பதிவக கருவி, 3 பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், பலரிடம் மோசடி செய்த கோடிக்கணக்கான ரூபாயை மின்னணு பண பரிவர்த்தனையான மின்னணு காசு எனப்படும் பிட்காய்ன் வடிவில் வைத்துள்ளது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களின் மின்னணு முகவரியை வாங்கி அதில் இருந்து சுமார் ரூ.1 கோடிக்கான பிட்காய்ன் மதிப்புகளை போலீசார் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் இவர்கள் இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story