கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்; துணைராணுவம் இன்று வருகை - ஒத்துழைப்பு கொடுக்க பொதுமக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்


கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்; துணைராணுவம் இன்று வருகை - ஒத்துழைப்பு கொடுக்க பொதுமக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
x
தினத்தந்தி 31 March 2020 5:56 AM IST (Updated: 31 March 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி துணை ராணுவ படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகம் வருகிறார்கள். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்ற பொதுமக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 8 பேருக்கு கொேரானா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகத்தில் இந்நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகிறார்கள். அதுபோல் சாலைகளில் வாலிபர்கள் சர்வசாதாரணமாக முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்து வருகிறார்கள்.

இதற்கிடையே கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் அதிக அளவில் வெளியில் நடமாடி வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். கர்நாடக அரசும் ஊரடங்கை மீறி வீட்டை விட்டு வெளியே வருபவர்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

அதாவது வீட்டில் இருந்து வெளியே வந்து ஊர் சுற்றி வந்த வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த போலீசார் நூதன தண்டனை வழங்குவதுடன், தடியடி நடத்தியும் வருகிறார்கள். இருப்பினும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பெரும்பாலான நகரங்களில் மக்களின் நடமாட்டம் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ெபாதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கர்நாடக மக்கள் பொறுமைக்கும், அமைதிக்கும் பெயர் பெற்றவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சட்டத்தை மதித்து நடப்பவர்கள். அதனால் கொரோனா வைரசால் கர்நாடகம் முடக்கப்பட்டு இருப்பது மக்களுக்கு சோதனை காலம் கிடையாது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதற்காக பிரதமர் மோடியே மன்னிப்பு கேட்டுள்ளார். நோய் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றவே தவிர்க்க முடியாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மக்களின் நலனுக்காக பாடுபட்டு வரும் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கையின் உண்மை நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா வைரசுக்கு வளர்ந்த நாடுகளே தத்தளித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைக்கும். அவரது நடவடிக்கையை கண்டு நாடு பெருமை கொள்கிறது.

அவரது உத்தரவை பின்பற்றி நாம் அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வீடுகளைவிட்டு வெளியே வருவது நல்லதல்ல. நாம் எந்த அளவுக்கு அரசின் உத்தரவை பின்பற்றுகிறோமோ, அதை பொறுத்து தான் இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும்.

மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்றினால், வருகிற 14-ந் தேதி முடக்க நடவடிக்கை தானாகவே முடிவுக்கு வந்துவிடும். இந்த ஊரடங்கு நடவடிக்கை முடிவுக்கு வருவதும், வராமல் இருப்பதும் நமது கைகளில் தான் உள்ளது. நகரங்களில் ஊரடங்கு உத்தரவை சிலர் மீறி நடப்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகையவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

போலீசாரும் நம்மை போல் மனிதர்கள் தானே. அவர்களின் பொறுமையை சோதிக்காதீர்கள். அவர்கள் ஏற்கனவே ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள். இதனால் அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். அதனால் கடும் நடவடிக்கை எடுக்க அவர்களை நிர்பந்திக்க வேண்டாம். நடவடிக்கை எடுத்த பிறகு அவர்களை குறை சொல்ல வேண்டாம்.

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், ஏழை மக்களுக்கு உணவு கிடைக்கவும் மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். உங்களின் குழந்தைகளையும் எதற்காகவும் வெளியில் அனுப்ப வேண்டாம். கிடைத்துள்ள இந்த நேரத்தை நல்ல நோக்கத்திற்கு பயன்படுத்துங்கள். புத்தகங்களை படியுங்கள்.

இதன் மூலம் உங்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும். ஏழை மக்கள் உள்பட அனைவரும் புதுமையான விஷயங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுங்கள். இந்த கடினமான தருணத்தில் கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்ற 24 மணி நேரமும் போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களின் தியாகத்தை நாம் மதிக்க வேண்டும். அதனால் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கர்நாடக மக்கள் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்ற வேண்டும். கூட்டத்தில் இருந்து மக்கள் தனித்திருக்க வேண்டும்.”

இவ்வாறு அதில் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி மக்களின் நடமாட்டத்தை தடுக்கவும், ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவும் கர்நாடகத்திற்கு துணை ராணுவ படையை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி துணை ராணுவப்படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது,

Next Story