மாவட்டம் முழுவதும் ‘கொரோனா தொற்று இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை’ - ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கொரோனா வைரஸ் தொற்று இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை’ என்று ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண உதவி வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களுடன் ரூ.1000-ம் ரேஷன் கடைகள் மூலம் வருகிற 2-ந்தேதி முதல் 10-ந் தேதிக்குள் மாவட்டம் முழுவதும் வழங்கப்படும்.
பொது வினியோக ஊழியர்கள் சங்கங்களில் சில ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க மாட்டோம் என்று கூறுகிறது. அதுபற்றி கவலையில்லை. மாவட்டத்தில் 100 சதவீதம் ரேஷன் பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து திண்டுக்கல் வந்த 1,291 பேர், வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வந்த 986 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 277 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
இதில் 1,393 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 884 பேர் தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்ற தகவலே நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
பொதுமக்களுக்கு அவசர கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அதுகுறித்த விவரங்களை co-l-l-r-d-gl@nic.in மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 7598866000 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கோ அனுப்பலாம். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தன்னார்வலர்கள் பங்கேற்க விரும்பினால் http://di-n-d-i-gul.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவில் இருந்து விவசாய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுகிறது. அவசியத்தேவைக்காக பொதுமக்கள் வெளியூர் செல்ல விரும்பினால் 7530001100 என்ற செல்போன் எண் மூலமோ அல்லது gc-p-c-o-r-o-na2020@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமோ விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story