கொரோனா வைரஸ் பீதி: கோவையில் முகக்கவசம் அணிந்து திருமணம் செய்த 3 ஜோடிகள்


கொரோனா வைரஸ் பீதி: கோவையில் முகக்கவசம் அணிந்து திருமணம் செய்த 3 ஜோடிகள்
x
தினத்தந்தி 31 March 2020 10:47 AM IST (Updated: 31 March 2020 10:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவையில் நேற்று முகக்கவசம் அணிந்து 3 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

கோவை,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த திருமணங்கள் எளிமையாக நடத்த மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளன. கோவையை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கோவையை சேர்ந்த நிகிலா, ஹரி ஆகிய இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். திருமண நிகழ்ச்சியில் சொற்ப அளவில் கலந்துகொண்ட உறவினர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர். மேலும் கிருமி நாசினி பயன்படுத்தி தங்களது கைகளை சுத்தம் செய்து கொண்டனர்.

சமூக இடைவெளியான 1 மீட்டர் தூரம் இடைவெளி விட்டு நின்றுகொண்டு மணமக்களை மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்ட இந்த திருமணம் ஒரு மண்டபத்தில் நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்ற நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மிக எளிமையாக நடந்தது.

இதேபோல் பேரூர் காளம்பாளையத்தை சேர்ந்த மீனாட்சி, ஈரோடு சென்னிமலையை சேர்ந்த கருப்பசாமி ஆகிய இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவை தெலுங்குபாளையத்தில் திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு, 1,200 பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மண்டபம் ரத்து செய்யப்பட்டு காளம்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இதில் இரு வீட்டாரை சேர்ந்த 15 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

மணமக்கள் உள்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். மேலும் எளிமையாக திருமணம் நடைபெற்றதால் தங்களுக்கு ரூ.5 லட்சம் வரை செலவு மிச்சமானதாகவும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு ரூ.5 ஆயிரம் நிதி வழங்கி உள்ளதாகவும் மணமக்கள் வீட்டார் தெரிவித்தனர்.

இதேபோல் கோவையை சேர்ந்த டாக்டர் சரளாதேவி, டாக்டர் விக்னேஷ் ஆகியோரது திருமணம் கோவை காந்தி மாநகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் எளிமையாக மணமக்கள் இருவரும் டாக்டர்கள் என்பதால் கொரோனா வைரஸ் தொற்று குறித்து திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு எடுத்து கூறினர்.

கோவையில் ஒரே நாளில் 3 திருமணங்கள் கொரோனா வைரஸ் காரணமாக எளிமையாக நடைபெற்றது. மேலும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் போதிய சமூக இடைவெளி விட்டு நின்றனர்.

Next Story