1 மீட்டர் இடைவெளியில் மக்கள் கால்கடுக்க காத்திருப்பதை தவிர்க்க மருந்துக்கடை முன்பு இருக்கைகள்
மருந்துக்கடை முன்பு மக்கள் கால்கடுக்க காத்திருப்பதை தவிர்க்க 1 மீட்டர் இடைவெளியில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கான கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் தஞ்சையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தடையை மீறி சாலைகளில் சுற்றித்திரிபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வந்தவர்களை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். தஞ்சை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தடைகளை ஏற்படுத்தி வைத்தனர்.
தஞ்சை மாநகரில் மருந்துக்கடைகள், மளிகைக்கடைகள், விவசாய இடுபொருட்கள் கடைகள், காய்கறிகடைகள் போன்றவை திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கோடுகள் வரையப்பட்டுள்ளன. அந்த கோட்டிற்குள் நின்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தஞ்சையில் ஒரு சில மருந்துக்கடைகளில் சதுர வடிவில் கட்டம் வரையப்பட்டு அதற்குள் பொதுமக்கள் நின்று மருந்துகளை வாங்கி செல்கின்றனர். தஞ்சை மாநகரில் தற்போது மருந்துக்கடைகளில் தான் மக்கள் அதிக அளவில் கூட்டம் காணப்படுகின்றன. தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு மருந்துக்கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த கடையில் மக்கள் கால்கடுக்க காத்து நின்று மருந்துகளை வாங்கிச்சென்றனர். அதுவும் கொளுத்தும் வெயிலில் அவர்கள் நின்றபடி வாங்கிச்சென்றனர். இந்த நிலையில் மக்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் வகையில் கடையின் முன்பு கீற்றுகளால் கொட்டகை போடப்பட்டு அதில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
20-க்கும் மேற்பட்ட இருக்கைகள் 1 மீட்டர் இடைவெளியில் போடப்பட்டுள்ளன. அதில் மருந்து வாங்க வருபவர்கள் அமர்ந்து மருந்துகளை வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story