2-வது நாளாக வீடுகளில் மருத்துவ பரிசோதனை சேலத்தில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி? - வீடு, ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்


2-வது நாளாக வீடுகளில் மருத்துவ பரிசோதனை சேலத்தில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி? - வீடு, ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 31 March 2020 12:48 PM IST (Updated: 31 March 2020 12:48 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 25 ஆயிரம் வீடுகளில் நேற்று 2-வது நாளாக மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது 31 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் வீடு, ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 11-ந் தேதி இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு 11 முஸ்லிம் மத போதகர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் சூரமங்கலம், அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, கிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 5 மசூதிகளுக்கு சென்று மதபோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே 4 முஸ்லிம் மத போதகர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்ததால் அவர்களும் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மதபோதகர்கள் சென்ற மசூதிகளிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள 25 ஆயிரம் வீடுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய 475 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் நேற்றுமுன்தினம் முதல் ஒவ்வொரு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்து வருகிறார்கள். நேற்று 2-வது நாளாக அந்த பணியை அவர்கள் தொடர்ந்து செய்தனர். இது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் கூறியதாவது:-

சேலம் மாநகரில் 2-வது நாளாக வீடுகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது 31 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இவர்களில் 27 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 4 பேர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை(இன்று) முதல் சேலம் புறநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 820 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story