மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி


மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 31 March 2020 8:13 AM GMT (Updated: 31 March 2020 8:13 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நேற்று நடந்தது. சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழக அரசு எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கையால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை யாரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 659 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சந்தேகத்தின் பேரில் 26 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 38 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 13 பேருக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 345 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதேபோல் 861 படுக்கைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் தயார்படுத்தப்பட்டு உள்ளன. ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் தலா ஒரு தனியார் ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் 925 ரேஷன் கடைகள் மூலம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் கொரோனா வைரஸ் நிவாரணத்தொகை மற்றும் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. 6 முதல் 8 நாட்களில் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கூட்டம் போட வேண்டாம். அங்கு சமூக இடைவெளியை பின்பற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

வெளி மாவட்டங்களில் இருக்கும் தொழிலாளர்களை நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வர தனி அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் 2,300 பேர் உள்ளனர். அவர்கள் தங்கிருக்கும் இடத்திலேயே உணவு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டைகள் வெளியே செல்வதற்கும் அதேபோல் கோழிகளுக்கு தேவையான தீவனப்பொருட்கள் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளத்தில் நாளை (புதன்கிழமை) முதல் தமிழகத்தில் அரசு மதுபான கடைகள் பகுதி நேரமாக இயங்கும் என தவறான தகவல் பரவி வருகிறது. அதுபோன்ற எண்ணம் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, தமிழகத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் முதியோர், குழந்தைகள் என 59 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 75 சதவீதம் பேர் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சொந்த வீடுகளுக்கு சென்று உள்ளனர். மீதமுள்ள 8,500 பேர் பாதுகாப்பு இல்லங்களில் சமூக இடைவெளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதில் மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பி.ஆர்.சுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் பொதுமக்கள் இடையே ஏற்பட்டு உள்ள கொரோனா பீதியை போக்கும் வகையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வேகவைத்த முட்டை வழங்கப்பட்டது. அதை அனைவரும் ருசித்து சாப்பிட்டனர். 

Next Story