மக்கள் கூடுவதை தவிர்க்க தனித்தனி இடங்களில் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்


மக்கள் கூடுவதை தவிர்க்க தனித்தனி இடங்களில் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
x
தினத்தந்தி 31 March 2020 3:32 PM IST (Updated: 31 March 2020 3:32 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் கூடுவதை தவிர்க்க தனித்தனி இடங்களில் பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா குறித்து அரசு துறைகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் பல இடங்களில் மக்கள் அதை மதிப்பதாக தெரியவில்லை. தடையை மீறி தெருக்களில் சுற்றி வருவதும், காய்கறிகள் வாங்க கூட்டம் கூடுவதும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு அம்சமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் கடைபிடிக்காமல் இறைச்சிக் கடைகளிலும், மார்க்கெட்டுகளிலும் மக்கள் கும்பலாக குவிந்தனர். இதனை தவிர்க்க புதிய பஸ் நிலையம் தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டது.

அதேநேரத்தில் அந்தந்த பகுதியில் பொதுமக்கள் காய்கறி வாங்கும் வகையில் உழவர் சந்தை, லாஸ்பேட்டை, அஜீஸ்நகர், நவீன மீன் அங்காடி உள்ளிட்ட பல இடங்களில் தற்காலிக காய்கறி சந்தை செயல்படும் என அரசு அறிவித்தது.

புதிய பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை அமைப்பதற்கான பணிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அவர்களுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன், கலெக்டர் அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன்பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் தலைமையில் புதுச்சேரி அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாதபடி பெரிய மார்க்கெட்டில் அதிக படியான மக்கள் கூடும் நிலை ஏற்பட்டது. அதனை தவிர்க்க இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் காய்கறி கடைகள் இயங்கும். இங்கு விற்பனையாளர்களும், பொருட்கள் வாங்க வருவோரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்வோம். ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க பெரிய மார்க்கெட்டில் மளிகை பொருட்கள், நேரு வீதியில் பழ வகைகள் என தனித்தனி இடங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை நகராட்சி ஆணையர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். சமூக இடைவெளியை பொதுமக்களும், விற்பனையாளர்களும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story