சபாநாயகர் இருக்கை முன்பு அ.தி.மு.க., பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
சட்டசபையில் கொரோனா குறித்து பேச அனுமதி கேட்டு சபாநாயகர் இருக்கை முன்பு அ.தி.மு.க., பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று தாக்கல் செய்தார். அப்போது கொரோனா வைரஸ் தாக்குதல், மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க., பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து அனுமதி மறுத்தார். கூட்ட முடிவில் வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்து சபாநாயகர் இருக்கை முன்பு நின்று அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். மக்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அப்போது அவரவர் இருக்கைக்கு சென்று அமரும்படி சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவுறுத்தினார். ஆனால் அதை ஏற்காத எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
ஒரு கட்டத்தில் சபாநாயகர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை உங்கள் இருக்கைக்கு செல்லாவிட்டால் வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து எச்சரித்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கிடையே சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டசபையை காலை 10.20 மணிக்கு ஒத்திவைத்தார். எம்.எல்.ஏ.க்களின் தர்ணா போராட்டம் 11 மணி வரை நீடித்தது. அதன்பின் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
முன்னதாக சபை நடவடிக்கை தொடங்கியதும் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுந்து தாங்கள் கொடுத்துள்ள ஒத்திவைப்பு மற்றும் கவனஈர்ப்பு தொடர்பாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வெளிநடப்பு செய்ததாக அன்பழகன் எம்.எல்.ஏ. அறிவித்து சபையை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் சபையை விட்டு வெளியேறினார்கள்.
இதுகுறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக புதுவை மக்கள் உயிர் பயம் கலந்த பீதியோடு வாழ்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அரசின் செயல்பாடு இல்லை. போதுமான மருத்துவ உபகரணங்கள், முக கவசங்கள், பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை. கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை. புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் 700 படுக்கை வசதிகள் தயார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 50 வெண்டிலேட்டர்கள் கூட இல்லை. முதல்-அமைச்சரின் அறிவிப்பு ஊரடங்கு உத்தரவை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது. சமூக இடைவெளி எங்கும் கடைபிடிக்கப்படவில்லை. அரிசி, காய்கறி மற்றும் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிக மாகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உணவு பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க முடியவில்லை. அரசு அறிவித்த ரூ.2,000 நிவாரணம் மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு இப்போது வரை நீடிக்கிறது. இதனால் அறிவிப்புகள் அமலுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story