கொரோனா வைரசை ஒழிக்க மக்கள் ஒன்றிணைந்து சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்


கொரோனா வைரசை ஒழிக்க மக்கள் ஒன்றிணைந்து சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்
x
தினத்தந்தி 31 March 2020 11:00 PM GMT (Updated: 31 March 2020 7:09 PM GMT)

கொரோனா வைரசை ஒழிக்க, மக்கள் ஒன்றிணைந்து சுயஊரடங்கை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள் விடுத்தார்.

கோவில்பட்டி, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இடைவெளி விட்டு வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கும் வகையில், கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளை பைபாஸ் ரோடு கூடுதல் பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கூடுதல் பஸ் நிலையத்தில் செயல்படும் காய்கறி கடைகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கோவில்பட்டியில் மினிலாரி மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறிகளை வழங்கும் நடமாடும் காய்கறி கடையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு காய்கறிகளை வழங்கினார். தொடர்ந்து அவர், அத்தைகொண்டான் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தொடங்கி வைத்தார்.

ஆலோசனை கூட்டம்

பின்னர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கோவில்பட்டி நகரசபை அலுவலக கூட்ட அரங்கில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், சின்னப்பன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், நகரசபை ஆணையாளர் ராஜாராம், யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிமாநில தொழிலாளர்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவர் தினமும் தலைமை செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியும், மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக கலந்துரையாடியும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா வைரசின் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 4,210 தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்த 2,100 பேரை கணக்கெடுத்து, அவர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 30 பேரில் 29 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை அறிக்கை கிடைத்து உள்ளது. மற்றொருவருக்கான பரிசோதனை அறிக்கை வர வேண்டி உள்ளது.

உணவுப்பொருள் இலவசம்

கொரோனா வைரசால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை (வியாழக்கிழமை) முதல் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.1,000 வழங்குவதுடன், ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி போன்ற உணவுப்பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இதனை முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக பயன்பாடற்ற பஸ் நிலையங்களை தற்காலிக மார்க்கெட்டாக மாற்றி வருகிறோம். இங்கு காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கி செல்லலாம். கோவில்பட்டியில் பொதுமக்களின் வசதிக்காக 3 நடமாடும் காய்கறி கடைகள் தொடங்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரசை ஒழிக்க மக்களிடம் அரசு எதிர்பார்ப்பது ஒத்துழைப்பை மட்டும்தான். முன்பு நாட்டின் விடுதலைக்காக அனைவரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியது போன்று, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து சுய ஊரடங்கை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு தந்து உதவ வேண்டும்.

கொரோனா வார்டுகள்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கும் வகையில், தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் தலா 150 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும் திருச்செந்தூர், காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 518 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நானும் (அமைச்சர் கடம்பூர் ராஜூ), சின்னப்பன் எம்.எல்.ஏ.வும் எங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளோம். கொரோனா வைரசுக்கு எதிராக மருத்துவர்கள் போராடுவது போன்று, ஊடகத்துறையினரும், செய்தியாளர்களும் உண்மை செய்திகளை மக்களிடம் எடுத்து செல்லி மகத்தான உதவி செய்து வருகின்றனர்.

கேபிள் இணைப்பு

ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீடுகளிலேயே இருக்கும் வகையில், கோவில்பட்டியில் கேபிள் டி.வி. இணைப்புக்கு பணம் செலுத்தாதவர்களின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். கேபிள் டி.வி. ஊழியர்கள் அடையாள அட்டையுடன் பணிக்கு செல்லலாம். இதேபோன்று பால் முகவர்களும் பொதுமக்களுக்கு பால் வினியோகம் செய்யலாம். கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் செயல்படும் தினசரி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், மேலும் 2 அல்லது 3 இடங்களில் மார்க்கெட்டை பிரித்து செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

நிவாரண நிதி

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உதவிடும் வகையில், கோவில்பட்டி கே.ஆர். நூற்பாலை நிர்வாக இயக்குனர் கே.ஆர்.அருணாசலம் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினார்.

இதேபோன்று மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், தொழில் அதிபர் நாகஜோதி ஆகியோரும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினர். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், சின்னப்பன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story