ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் கேரளாவில் மீன்பிடித்துவிட்டு பாம்பன் வந்த 8 மீனவர்கள்; 4 ஆயிரம் கிலோ மீன்களை விற்க அனுமதி


ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் கேரளாவில் மீன்பிடித்துவிட்டு பாம்பன் வந்த 8 மீனவர்கள்; 4 ஆயிரம் கிலோ மீன்களை விற்க அனுமதி
x
தினத்தந்தி 1 April 2020 3:15 AM IST (Updated: 1 April 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் கேரள கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டு, நாகை மீனவர்கள் 8 பேர் நேற்று பாம்பன் வந்திறங்கினர். அவர்கள் கொண்டு வந்த 4 ஆயிரம் கிலோ மீன்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது.

ராமேசுவரம், 

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியை சேர்ந்த அருளானந்தம் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகும், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் படகுகள் 15 முதல் 20 நாட்கள் வரை கடலிலேயே தங்கி மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் அருளானந்தம் படகில் நாகையை சேர்ந்த 8 மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். அவர்கள் கொச்சி துறைமுக பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்றுவிட்டு கடந்த 12-ந்தேதி கேரள ஆழ்கடல் பகுதியில் தங்கி மீன்பிடித்து விட்டு, கடந்த 27-ந்தேதி கொச்சி துறைமுகத்துக்கு திரும்பி வந்துள்ளனர். ஆனால் அங்கு படகை நிறுத்தவோ, படகில் உள்ளவர்கள் இறங்கவோ அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த படகுடன் புறப்பட்ட 8 மீனவர்களும் கடந்த 30-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுக பகுதிக்கு வந்து படகை நிறுத்தி படகில் உள்ள மீன்களை இறக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், படகை நிறுத்தி மீன்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை படகின் உரிமையாளரிடம் தெரிவித்த போது, அவர் படகுடன் பாம்பன் வருமாறு மீனவர்களிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து 8 மீனவர்களும் நேற்று காலை 10 மணிக்கு படகுடன் பாம்பன் தெற்குவாடி துறைமுக கடல் பகுதிக்கு வந்தனர். அங்கு ஆழமான கடல் பகுதியில் படகை நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு 8 மீனவர்களும் பைபர் படகு மூலம் பாம்பன் கரைக்கு வந்திறங்கினர்.

கேரளாவில் இருந்து 8 மீனவர்கள் பாம்பன் வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து முன்கூட்டியே அங்கு தாசில்தார் அப்துல்ஜபார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் யுவராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்ராஜா உள்ளிட்ட அதிகாரிகளும், டாக்டர் கிளாரட் தலைமையில் சுகாதார துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். கரை வந்து சேர்ந்த 8 மீனவர்களையும் சுகாதாரத்துறையினர் தனித்தனியாக பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்பு 8 மீனவர்களும் ஒரு வேனில் ஏற்றி திருப்புல்லாணியில் உள்ள ஒரு இடத்தில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர். மேலும் மீனவர்கள் வந்த படகில், அவர்கள் பிடித்து வந்த சூரை உள்பட பல்வேறு மீன் வகைகள் 4 ஆயிரம் கிலோ இருந்தது. அந்த மீன்களை படகிலிருந்து இறக்கி விற்பனை செய்து கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story