வேட்டங்குடி சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கும் ஊரடங்கோ?


வேட்டங்குடி சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கும் ஊரடங்கோ?
x
தினத்தந்தி 31 March 2020 9:45 PM GMT (Updated: 31 March 2020 9:19 PM GMT)

வேட்டங்குடி சரணாலயம் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

திருப்பத்தூர், 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி. இங்குள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் சுமார் 38.4 ஏக்கர் பரப்பளவில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வரும். பின்னர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இங்குள்ள கண்மாயில் தண்ணீர் வற்ற தொடங்கியதும் இங்கிருந்து தங்களது இருப்பிடத்திற்கு புறப்பட்டு செல்கிறது.

மேலும் இங்கு மழைக்காலங்களில் உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்திநாரை உள்ளிட்ட 217 வகையான வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டுக்கு முந்தைய காலங்களில் இந்த பகுதியில் போதிய மழையில்லாததால் கண்மாய்கள், குளங்கள் வற்றிய நிலையில் காணப்பட்டது. இதனால் பறவைகளின் வரத்தும் குறைந்து போனது.

கடந்தாண்டு பெய்த பருவ மழையால் இந்த பகுதியில் இருந்த கண்மாய்கள் நிரம்பின. இதனால் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கின. அதன் பின்னர் இங்குள்ள கண்மாய் வற்றி போனதால் பறவைகள் தங்களது இருப்பிடத்தை நோக்கி செல்கின்றன. இதனால் தற்போது பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுதவிர தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதனை முன்கூட்டியே உணர்ந்து, பறவைகள் தங்களது இருப்பிடத்துக்கு சென்றதோ என்னவோ?.

இதுகுறித்து இந்த பகுதியைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மழைக்காலங்களில் இங்குள்ள சரணாலயத்திற்கு ஆஸ்திரேலியா, இத்தாலி, இலங்கை, பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து இன விருத்தி செய்யும். கடந்தாண்டு இந்த கண்மாயில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்தது. கண்மாயில் இருந்த தண்ணீர் வற்ற தொடங்கியதும் இங்கிருந்த பறவைகள் வேறு இடங்களுக்கு செல்ல தொடங்கியது. தற்போது இங்கு பறவைகளுக்கும் ஊரடங்கு போன்று, முற்றிலுமாக வேறு இடத்திற்கு அவை இடம் பெயர்ந்ததால், பறவைகள் சரணாலயம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது” என்றார்.

Next Story