அனுமதியின்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் - போலீசார் எச்சரிக்கை
அனுமதியின்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
144 தடை உத்தரவில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, இறைச்சி, மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தினமும் அவசியம் இல்லாமல் வாகனங்களில் வெளியே செல்வது அதிகமாக காணப்படுகிறது.
இதையடுத்து அத்தியாவசிய மற்றும் அரசு பணிகளில் உள்ளவர்களும், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் அடையாள அட்டை பெற வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்கலாம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் அடையாள அட்டை பெறாமல் வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. அந்த வாகனங்கள் கமர்சியல் சாலையில் சமூக இடைவெளி விட்டு வரிசையாக சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. அனுமதி இல்லாமல் வாகனங்களை இயக்கியவர்களிடம் உங்கள் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அடையாள அட்டை பெற்ற பிறகு தான் வாகனங்களை வெளியில் இயக்க வேண்டும்.
அந்த அட்டையில் எங்கு செல்கிறீர்கள், எதற்காக போகிறீர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அனுமதி இல்லாமல் நான்கு சக்கர வாகனங்களை கண்டிப்பாக இயக்கக்கூடாது. இதை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். இன்று (புதன்கிழமை) முதல் அனுமதி இல்லாமல் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனால் அந்த வாகனங்கள் விடுவிக்கப் பட்டன.
Related Tags :
Next Story