ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை டோக்கன் வழங்குவதாக பரபரப்பு: சமூக விலகலை கடைபிடிக்காமல் திரண்ட பொதுமக்கள்
தர்மபுரி, பாப்பாரப்பட்டியில் ரேஷன் கடைகளில் நிவாரணப்பொருட்கள் வழங்குவதாக சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.1,000 நாளை (வியாழக்கிழமை) முதல் வினியோகிக்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நிவாரண பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக விலகலை பின்பற்றி 3 அடி இடைவெளியில் இந்த பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிவாரண பொருட்களுக்கான டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தர்மபுரி குப்பாண்டி தெரு பகுதியில் உள்ள ஒரு ரேஷன்கடையில் நிவாரண பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படுவதாக நேற்று தகவல் பரவியது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் அந்த கடை முன்பு கூட தொடங்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இவ்வாறு கூட்டம் கூடுவது குறித்து தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் ரேஷன்கடை முன்பு கூடியவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கூடியவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் பாப்பாரப்பட்டி அரசமரத்தெரு பகுதியில் உள்ள ரேஷன்கடை முன்பு நிவாரண பொருட்களுக்கான டோக்கன்கள் வினியோகிக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதுபற்றி தகவல் அறிந்த குடும்ப அட்டைதாரர்கள் டோக்கன்களை வாங்க அந்த பகுதியில் திரண்டு காத்திருந்தனர். 3 ரேஷன் கடைகளுக்கு ஒரே இடத்தில் டோக்கன் வழங்கப்பட்டதால் அந்த பகுதியில் கூட்டம் அதிகரித்தது. டோக்கன் வினியோகித்த பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்கள். இருந்தபோதிலும் மக்கள் கூட்டமாக அருகருகே நின்றபடி டோக்கன் வாங்க காத்திருந்தனர். அரசு அறிவுறுத்தி உள்ள சமூக விலகல் பாதுகாப்பு விதிகளை இந்த இடத்தில் கூடிய குடும்ப அட்டைதாரர்கள் புறக்கணித்ததால் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story