சோதனைக்கு நிறுத்தாமல் போலீஸ் ஜீப்பை இடித்து தள்ளிவிட்டு காரை ஓட்டிச்சென்ற டிரைவர்: சப்-இன்ஸ்பெக்டர் காயம்
மகேந்திரமங்கலம் அருகே சினிமா பாணியில், வாகன சோதனைக்கு நிறுத்தாமல் போலீஸ் ஜீப்பை இடித்து தள்ளிவிட்டு காரை ஓட்டிச்சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். தடுப்பு விழுந்ததில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார்.
தர்மபுரி,
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காடுசெட்டிப்பட்டியில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் நோக்கி நேற்று வேகமாக ஒரு கார் வந்தது.
அப்போது அந்த சோதனைச்சாவடியில் காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்று விட்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வெள்ளிச்சந்தை 4 ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாரதிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் போலீசாருடன் அந்த பகுதியில் கார் செல்லாத வகையில் ரோட்டில் போலீஸ் ஜீப்பை நிறுத்தி வைத்தும், தடுப்பு (பேரிகார்டு) வைத்தும் கண்காணித்து கொண்டு இருந்தார். அப்போது அந்த கார் வேகமாக வந்து போலீஸ் ஜீப்பை இடித்து தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் இடது புற சாலையில் திரும்பி சென்று விட்டது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாரதிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டி சென்று அனுமந்தபுரம் அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கார் டிரைவர் அனுமந்தபுரத்தை சேர்ந்த பழனி (வயது 53) என்பதும், பெங்களூருவில் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்துள்ளாரா? என சோதனை நடத்தினர். ஆனால் காரில் எதுவும் இல்லை. பின்னர் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் பழனியை கைது செய்தனர். மேலும் காரையும் பறிமுதல் செய்தனர். காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாரதி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாகன சோதனையின் போது போலீஸ் ஜீப் மீது மோதி விட்டு கார் நிற்காமல் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story