கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது: தேவையில்லாமல் வீட்டில் இருந்து யாரும் வெளியே வர வேண்டாம் - போலீஸ் துணை கமிஷனர் அறிவுரை
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் தேவையில்லாமல் வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை அறிவுரை வழங்கி உள்ளார்.
சேலம்,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வரும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 7-வது நாளாக சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. இருந்தபோதிலும் காய்கறி, மளிகை மற்றும் மருந்து கடைகளுக்கு செல்வதாக கூறி சிலர் ஆங்காங்கே மொபட், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றதை காணமுடிந்தது. அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் அந்த வழியே வந்த வாகன ஓட்டிகளுக்கு சில அறிவுரைகளை கூறினர்.
அதே சமயம் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்ததற்கும், ஹெல்மெட், லைசென்ஸ் இல்லாதது உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதித்தனர். இதனால் அபராதம் கட்டுவதற்காக வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து காத்திருந்தனர். அப்போது பொது மக்களுக்கு போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை அறிவுரைகளை கூறினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் காய்கறி, மளிகை மற்றும் மருந்து கடைகளுக்கு செல்வதாக கூறி வெளியே செல்கிறீர்கள். தயது செய்து நோயின் தாக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். வெளியே வந்து பிறரை தொட்டு பேசி நோயை வீட்டிற்கு அழைத்து செல்லாதீர்கள். ஒருவருக்கு வந்தால் அவருடைய குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கும். உங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. அதை புரிந்து கொள்ளுங்கள். வழக்கு, அபராதம், கைது போன்ற நடவடிக்கை எடுத்தால் தான் இனிமேல் வெளியே வர மாட்டீர்கள். எனவே தேவையில்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். காவல்துறைக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு துணை கமிஷனர் பேசினார்.
இதைத்தொடர்ந்து கன்னங்குறிச்சி, டவுன், அழகாபுரம், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதை துணை கமிஷனர் தங்கதுரை பார்வையிட்டார்.
Related Tags :
Next Story