உத்தமபாளையம் அருகே உணவின்றி தவித்த வடமாநில தொழிலாளர்களை அரவணைத்த கிராம மக்கள்


உத்தமபாளையம் அருகே உணவின்றி தவித்த வடமாநில தொழிலாளர்களை அரவணைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 1 April 2020 10:36 AM IST (Updated: 1 April 2020 10:36 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே உணவின்றி தவித்த வடமாநில தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை வழங்கி கிராம மக்கள் அரவணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் தனியார் கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டுவதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து 7 பெண்கள் உள்பட 25 கூலித்தொழிலாளர்கள் கடந்த மாதம் வந்திருந்தனர். அந்த பகுதிகளில் உள்ள கரும்பு தோட்டங்களில் தங்கி, அவர்கள் கரும்பு வெட்டி தேனி சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டன. இதனால் கரும்பு வெட்டும் பணியை விவசாயிகள் நிறுத்திவிட்டனர். இதனால் வேலையின்றியும், சொந்த ஊருக்கு செல்லமுடியாமலும் வெளி மாநில கூலித்தொழிலாளர்கள் தவித்தனர்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக அவர்கள் போதிய உணவின்றி தவித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராயப்பன்பட்டி கிராம மக்கள், தங்களால் இயன்ற அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை உணவின்றி தவித்த வடமாநில தொழிலாளர்களுக்கு வழங்கி அரவணைத்தனர். மேலும் ராயப்பன்பட்டி, கோகிலாபுரம் ஊராட்சிகள் சார்பிலும் அந்த தொழிலாளர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உணவின்றி தவித்த வடமாநில தொழிலாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவதாகவும், அனைவரையும் ஊருக்குள் இருக்கும் மண்டபத்தில் தங்குமாறும் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் ஊருக்குள் தங்குவதற்கு விருப்பம் இல்லை என்றும், தோட்டத்திலேயே தங்கி கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு கரும்பு வெட்டும் பணியை முடித்துக்கொண்டு சொந்த மாநிலத்துக்கு திரும்பி விடுவோம் என்று கூறினார்கள்.

இதற்கிடையே தேனி சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து வசதியும் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story