கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு


கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 1 April 2020 5:27 AM GMT (Updated: 1 April 2020 5:27 AM GMT)

கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர்,

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாவும் திகழ்கிறது. இங்கு நடைபெறும் ஆழித்தேரோட்ட விழா உலக அளவில் பிரசித்தி பெற்றது.

ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்(மே) மாதம் 4-ந் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

திருவிழாவையொட்டி தினசரி சாமி விதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. ஆழித்தேரின் கண்ணாடி கூரைகள் பிரிக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்படி தியாகராஜர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த 20-ந் தேதி முதல் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் அன்றாட பூஜைகள் கோவிலில் வழக்கம்போல் நடந்து வருகிறது. கோவில் பிரகாரத்துக்குள்ளேயே சாமி வாகனம் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் ஆழித்தேரோட்டத்துக்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆழித்தேரோட்ட விழா ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு முடிந்து தேர் கட்டுமான பணிகள் 20 நாட்களில் முடிக்கப்பட்டாலும் தேரை இழுப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், ஆழித்தேரோட்ட விழா அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்தப்படாமல் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் தேர், தற்போது கூரைகளால் மூடப்பட்டுள்ளது.


Next Story