அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை கொண்டு செல்ல வாட்ஸ்-அப் மூலம் அனுமதி சீட்டு - கலெக்டர் அருண் தகவல்
புதுச்சேரியில் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை கொண்டு செல்வதற்கு வாட்ஸ்-அப் மூலம் அனுமதி சீட்டு வழங்கப்படும் என கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை கொண்டு செல்வதற்கு வாட்ஸ்-அப் மூலம் அனுமதி சீட்டு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தலைமை தாங்கினார். இதில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப், துணை கலெக்டர் சுதாகர் உட்பட வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் கலெக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரிய மார்க்கெட்டில் காய்கறி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. புதுவை பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் காய்கறி விற்பனை தொடங்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தாராளமாக கிடைக்கின்றன. ஊரடங்கை மீறி வெளியே திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வணிகர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுமதிசீட்டு வழங்கும் பணியை தொடங்கி உள்ளோம். இனிமேல் யாரும் அனுமதி சீட்டு கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வர வேண்டாம். வாட்ஸ்-அப் மூலமாகவே அனுமதி சீட்டினை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக வேளாண்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சி துறை ஆகியவற்றின் அனுமதிச் சீட்டினை வாட்ஸ்-அப் மூலம் தனித்தனியே வாங்கி கொள்ளலாம்.
ஊரடங்கு உத்தரவு காலத்தில் சமூக ஆர்வலர்கள் தெருவோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கி வந்தனர். அவர்களுக்காக அனுமதிச் சீட்டும் வழங்கி இருந்தோம். தற்போது தேசிய பேரிடர் நிதியில் இருந்து உணவு வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. எனவே அவர்களுக்கு அரசு மூலம் உணவு வழங்கப்படும். சமூக ஆர்வலர்கள் இனி உணவு வழங்க தேவையில்லை. தேவைப்படும்போது அவர்களின் உதவியை நாங்கள் பெற்றுக்கொள்வோம்.
இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.
Related Tags :
Next Story