கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தனி ஆய்வகம் அமைக்க நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தனி ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக செய்துங்கநல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வீடு, வீடாக சுகாதார பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆய்வு நடத்துகின்றனர்.
பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் எத்தனை வீடுகள் உள்ளன. அதில் யார் யார் குடியிருக்கிறார்கள், அவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாது. பேட்மாநகரம் பகுதியில் இருந்து டெல்லி சென்று வந்த 2 பேரும் கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அந்த பகுதியிலும் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோன்று மேலும் 3 பேர் டெல்லிக்கு சென்று வந்ததாக தகவல் கொடுத்தனர். அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரும், காயல்பட்டினத்தை சேர்ந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கயத்தாறு பகுதியிலும் ஒருவர் டெல்லி சென்று வந்து இருப்பது தெரியவந்தது. அவரும், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேறு யாரேனும் டெல்லிக்கு சென்று விட்டு வந்தவர்கள் இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் வந்தால், உரிய சிகிச்சை அளிக்கவும், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் வாய்ப்பாக அமையும். இதேபோன்று காயல்பட்டினத்தில் வெளிநாடு சென்று வந்த 400 பேரும் உள்ளனர். அந்த பகுதியில் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 346 தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி உள்ள இடத்தில் தங்கி உள்ளனர். சிலர் மட்டும் உணவு கேட்டனர். அவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகளை ஒவ்வொரு தாலுகாவிலும், ஒரு துணை தாசில்தார் தலைமையில் கண்காணித்து வருகிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனியாக ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று குறித்து நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story