ரேஷன் கடைகளில் இன்று முதல் ரூ.1000 வினியோகம்: டோக்கன் வீட்டுக்கே வந்து வழங்கப்படும் - கலெக்டர் வினய் தகவல்


ரேஷன் கடைகளில் இன்று முதல் ரூ.1000 வினியோகம்: டோக்கன் வீட்டுக்கே வந்து வழங்கப்படும் - கலெக்டர் வினய் தகவல்
x
தினத்தந்தி 2 April 2020 4:00 AM IST (Updated: 2 April 2020 2:55 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் இன்று முதல் ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்படுகிறது என்றும், டோக்கன் வீட்டுக்கே வந்து வழங்கப்படும் என்றும் கலெக்டர் வினய் கூறினார்.

மதுரை,

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.1000 மற்றும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் என அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் வழங்குவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 1 360 ரேஷன் கடைகள் உள்ளன. 8 லட்சத்து 30 ஆயிரத்து 622 அரிசி ரேஷன் கார்டுகள் உள்ளன. நிவாரண பொருட்கள் டோக்கன் முறையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன. இதற்கான டோக்கன் நேற்று முதல் வழங்கப்பட்டது. அந்த டோக்கனில் கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1000, மற்றும் அட்டைதாரர் விவரம், நிவாரணம் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உள்ள தேதி, நேரத்தின் போது தான் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்று நிவாரண பொருட்களை பெற்று கொள்ள வேண்டும்.

மேலும் நாள் ஒன்றுக்கு காலையில் 50 பேருக்கு, மாலையில் 50 பேருக்கு என மொத்தம் 100 பேருக்கு வழங்கப்படும். இது குறித்து கலெக்டர் வினய் கூறும் போது, நிவாரண தொகை மற்றும் பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நிவாரண தொகை மற்றும் பொருட்கள் கண்டிப்பாக வழங்கப்படும்.

எனவே பொதுமக்கள் பொறுமை காத்து டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம். டோக்கன் வாங்க யாரும் கடைக்கு வர வேண்டாம். வீட்டில் வந்து வழங்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு மட்டும் நேரடியாக சென்று பொருட்கள் வழங்கப்படும். பொருட்கள் வாங்க வரும் போது ஸ்மார்ட் கார்டு, டோக்கன் ஆகியவற்றை வாகன சோதனையின் போது காட்ட வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வந்து பெற்று செல்ல வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story