திருவள்ளூரில் அம்மா உணவகத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு


திருவள்ளூரில் அம்மா உணவகத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 April 2020 4:00 AM IST (Updated: 2 April 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் அம்மா உணவகத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் நகராட்சி பெரியகுப்பத்தில் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர், தங்கும் முகாம்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் உணவு தயாரிப்பதற்கு 2 மாதங்களுக்கு தேவையான பொருட்கள் இருப்பு உள்ளதா? என ஆய்வு செய்தார். நகராட்சி சார்பாக வழங்கப்படும் உணவு, ஆதரவற்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் தங்குதடையின்றி வினியோகம் செய்யதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் அம்மா உணவகத்தில் சமைக்கப்பட்ட உணவையும் கலெக்டர் ருசி பார்த்தார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 413 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் இலவசமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கப்பட உள்ளது. 1134 ரேஷன் கடைகள் வாயிலாக வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் ரேஷன் கடைகளில் சமூக விலகலை கடைபிடித்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது அவருடன் திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் சந்தானம், நகராட்சி பொறியாளர் செல்வகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story