விருதுநகர் மாவட்டத்தில் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரம்
மாவட்டத்தின் பல இடங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
ராஜபாளையம்,
உலகையே கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிக தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் நகரம் முதல் குக்கிராமம் வரை தற்போது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தெருக்களை கழுவி சுத்தம் செய்யும் அளவுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, அய்யனாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரசு சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் நேற்று காலை தொடங்கி வைத்தார். முன்னதாக மேலராஜகுலராமன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீரில் பிளச்சிங் பவுடர் கலந்து தெளிக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
அடுத்ததாக சத்திரப்பட்டியில் இயங்கும் காய்கறி சந்தையில் சமூக விலகல் முறை சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். பின்னர் தனியார் தொண்டு அமைப்பு சார்பில், ஜெர்மன் மற்றும் இத்தாலி கூட்டு முயற்சியில் 15 அடி உயரத்தில், 24 துளைகளுடன் உருவான எந்திரத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்டார். இந்த எந்திரத்தின் மூலம் 20 நிமிடங்களில் ஆயிரம் லிட்டர் கிருமி நாசினியை விரைவாகவும், அதே நேரத்தில் இடைவெளியின்றியும் தெளிக்க முடியும். இதற்கு பயன்படுத்தப்படும் மருந்தை தொண்டு அமைப்பின் தலைவர் ராமராஜ் ஊராட்சிக்கு இலவசமாக வழங்கினார். இதே போல தொண்டு நிறுவனம் சார்பில் மேலும் 3 எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் தீயணைப்பு துறை வாகனத்தின் மூலம் மருந்து தெளிக்கும் பணியையும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஊராட்சி நிர்வாகம், தீயணைப்புதுறை மற்றும் தனியார் என மொத்தம் 6 வாகனங்கள் சத்திரப்பட்டி சுற்று வட்டாரப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கந்த கிருஷ்ணகுமார், மாடசாமி, ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளர் சுப்பையாதுரை, ஒன்றிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் முருகபூபதி, ஒன்றிய அவைத்தலைவர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி ராமசாமி, மீனவரணி செயலாளர் குட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
நரிக்குடி மற்றும் வீரசோழன் ஊராட்சியும், திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையமும் இணைந்து தீயணைப்பு வாகனத்தில் சாலைகளில் கிருமி நாசினிதெளித்து சாலைகளை முழுமையாக தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், மல்லிகா, நரிக்குடி ஊராட்சி தலைவர் முத்துமாரி காளஸ்வரன், துணைத்தலைவர் ஜவஹர் வெங்கடேச பாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் கவிதா, வீரசோழன் ஊராட்சி தலைவர் முகம்மது சாதிக்அலி, துணைத் தலைவர் செய்யது முகம்மது சேட், ஊராட்சி செயலர் ராஜசேகர பாண்டியன், தீயணைப்பு நிலைய அலுவலர் மணிமுத்து, முன்னணி தீயணைப்போர் சந்திரசேகர், முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாணிப்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பொன்மாரி ஸ்ரீரங்ககுமார், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் இயற்கை கிருமி நாசினி தெளிக்கும் பணியை ஊராட்சி தலைவர்் கனகா மாரிமுத்து தொடங்கி வைத்தார்். மஞ்சள், வேப்பிலை, உப்பு, பால் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து இயற்கை கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
இதேபோல தளவாய்புரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் முத்தமிழ் இளைஞர்் மன்றம் சார்பில் கோமியம், மாட்டுச்சாணம், வேப்பிலை, மஞ்சள், பூண்டு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து கை தெளிப்பான் மூலம் அனைத்து தெருக்களிலும் தெளித்தனர்்.
சாத்தூர் யூனியன் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம், மேட்டமலை, சின்னகாமன்பட்டி, படந்தால், சத்திரப்பட்டி, மேட்டுப்பட்டி உள்பட 46 கிராம ஊராட்சிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஆதரவற்றோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. இதில் சாத்தூர் யூனியன் மண்டல அலுவலர் வெங்கடேஸ்வரன், யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் மற்றும் சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாகுலன், காஜா மைதீன் பந்தே நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story