மீன், காய்கறி, இறைச்சி வாங்கும் இடங்களில் 100 சதவீதம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் - சென்னை கலெக்டர் உத்தரவு
மீன், காய்கறி, இறைச்சி வாங்கும் இடங்களில் 100 சதவீதம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று சென்னை கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெளிமாநில தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைத்து உணவு மற்றும் மருத்துவ வசதி செய்ய வட்டாட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் அழுத்த நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள், தாங்களாகவே தங்களை தனிப்படுத்திக் கொள்வதோடு வீட்டில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகள், அவர்களது உடல்நிலை குறித்து தேவையான உதவிக்கு 102 மற்றும் 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். காய்கறி, மீன், இறைச்சி கடைகளில் பொருட்கள் வாங்கும் போது 100 சதவீதம் சமூக விலகலை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வாடகைக்கு குடியிருப்பின் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வாடகை வசூல் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். திருமணம், மருத்துவம் மற்றும் இறப்பு காரணங்களுக்காக சென்னை மாவட்டத்துக்குள் செல்ல மாநகராட்சி மண்டல அலுவலர்கள் அனுமதி வழங்குவார்கள். மேற்கண்ட காரணங்களுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story