கொரோனா பிரச்சினையால் நிதி நெருக்கடி; அரசு ஊழியர்களின் சம்பளம் 2 தவணையாக வழங்கப்படும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
கொரோனா பிரச்சினையால் அரசு ஊழியர்களின் சம்பளம் 2 தவணையாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க அரசு ஊழியர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் சம்பளத்தில் 25 முதல் 60 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் என துணை முதல்-மந்திரி அஜித்பவாா் அறிவித்து இருந்தார். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது. கொரோனா வைரஸ் பிரச்சினையால் நிதி நெருக்கடி இருப்பதால் அவர்களின் சம்பளம் 2 தவணைகளாக வழங்கப்படும்.
போலீஸ், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அரசின் இந்த முடிவுக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதேபோல குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
Related Tags :
Next Story