கர்நாடகத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு


கர்நாடகத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 April 2020 5:11 AM IST (Updated: 2 April 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் 98 பேர் அந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-

பெங்களூருவை சேர்ந்த 24 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு எப்படி இந்த வைரஸ் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவை சேர்ந்த 37 வயது மற்றும் 27 வயது நபர்கள், அங்குள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மைசூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ கல்லூரிகள்

பெங்களூருவை சேர்ந்த 33 வயது வாலிபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அதன் மூலம் அவருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த 49 வயது நபர் துபாய்க்கு சென்றுவிட்டு கடந்த மார்ச் மாதம் 20&ந் தேதி விமானம் மூலம் மங்களூரு திரும்பினார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 26 வயது இளைஞர், ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுவிட்டு கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி பெங்களூரு திரும்பினார். அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த 63 வயது நபர் ஜெர்மனிக்கு சென்றுவிட்டு விமானம் மூலம் கடந்த மார்ச் 21-ந் தேதி பெங்களூரு வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மைசூருவை சேர்ந்த 63 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் மைசூருவை சேர்ந்த 27 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கும், ஏற்கனவே வைரசால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மனைவியிடம் இருந்து பரவியுள்ளது. இந்த 9 பேரும் அந்தந்த மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது.

நேற்று புதிதாக கொரோனா அறிகுறியுடன் 133 பேர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடகத்தினர் 080-29711171 என்ற எணணில் தொடர்புகொள்ள வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story