குடிசை பகுதி மக்களுக்கு இலவச பால் வெளிமாநிலங்களுக்கு விளைபொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை - எடியூரப்பா அறிவிப்பு


குடிசை பகுதி மக்களுக்கு இலவச பால் வெளிமாநிலங்களுக்கு விளைபொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை - எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 2 April 2020 5:30 AM IST (Updated: 2 April 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

குடிசை பகுதி மக்களுக்கு இலவசமாக பால் வழங்கப்படும் என்றும், வெளிமாநிலங்களுக்கு விளைபொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பஸ், ரெயில், விமானம் உள்பட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், தோட்டக்கலைத்துறை மந்திரி நாராயணகவுடா, உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி கோபாலய்யா, கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பாலச்சந்திர ஜார்கிகோளி மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காய்கறி கிடைக்கும்

“கர்நாடகத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், எலுமிச்சை போன்ற பொருட்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அந்த பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவசாயிகளின் விளைபொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை இல்லை. அவற்றை போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தக்காளி பதப்படுத்தும் மையங்கள் மூலம் தக்காளி சாறு (ஷாஸ்) தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்படும் ஹாப்காம்ஸ் கடைகள் மூலம் தக்காளி, முட்டை உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் நுகர்வோருக்கு நியாயமான விலையில் தக்காளி உள்பட காய்கறிகள் கிடைக்கும்.

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் இடைவெளிவிட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும்.

அச்சம் தேவை இல்லை

விவசாயிகளின் விளைபொருட்களை சரக்கு ரெயில்கள் மூலம் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.

சமையல் எண்ணெய் போதுமான அளவுக்கு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை பாக்கெட் மூலம் நிரப்பும் பணியை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விவசாய சாகுபடிக்கு தேவையான உபகரணங்களை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

69 லட்சம் லிட்டர் பால்

அடுத்த மாதம் 4 மாவட்டங்களில் உழவு பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 27 பட்டுக்கூடு சந்தைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் இடையே நேரடியாக வர்த்தகம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில இடைத்தரகர்கள் விவசாயிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று விலையை குறைத்து கொள்முதல் செய்வதாக புகார்கள் வந்துள்ளன.

தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பட்டுக்கூடு சந்தைகளை திறக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அரிசி ஆலைகளை திறக்க உத்தரவிட்டுள்ளேன். கர்நாடக பால் கூட்டமைப்பு மூலம் தினமும் 69 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 42 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆகாமல் மிச்சமாகிறது.

தொழிலாளர்களுக்கு உணவு

இந்த பாலை அரசே கொள்முதல் செய்து குடிசை பகுதிகள் மற்றும் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஊரடங்கு உத்தரவால் நகரங்களில் சிக்கி தவிக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதியை அந்தந்த கட்டுமான தொழில் நிறுவனங்களே செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story